கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஸ்கானிங் இயந்திரங்களின் பற்றாக்குறை மற்றும் பழுதடைந்த நிலை காரணமாக நோயாளர்கள் பல்வேறுசிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட மூன்று ஸ்கானிங் இயந்திரங்களில் ஒன்று பழுதான நிலையில் வைத்தியசாலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், ஏனைய இரண்டு இயந்திரங்களில் ஒன்று முழுமையான சேவையில் இல்லாத நிலை காணப்படுகிறது.
இதனால் 10 வருடங்களுக்கு மேல் இயங்கி வரும் ஒரே ஒரு இயந்திரம் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளதுடன், இதன் மூலம் துல்லியமான ஸ்கானிங் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்திற்கு பலமுறை கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்களின் தொடர் நடவடிக்கையின்மையால் தற்போதும் எவ்வித மாற்று நடவடிக்கைகளும் இன்றி இப்பிரச்சினை தொடர்கிறது.
அத்தோடு, குறித்த ஸ்கானிங் அறையில் உள்ள குளிரூட்டியும் சீரான நிலையில் இல்லாத காரணத்தினால், இது போன்ற உணர்திறன் வாய்ந்த இயந்திரங்களின் சேவைகள் மேலும் பாதிக்கப்படுவதாக வைத்தியசாலை தரப்பினர் கவலை தெரிவிக்கின்றனர்.
நாளாந்தம் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் வருகை தரும் ஒரு மாவட்ட வைத்தியசாலையைப் பொறுத்தவரை, இது போன்ற ஸ்கானிங் இயந்திரங்களின் பணி மிக முக்கியமானது.
ஆனால், இதன் செயல்திறனற்ற நிலைமையால் கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல், கணையம், சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர்ப்பை ஆகியவற்றில் உள்ள கட்டிகள், கற்கள், வீக்கங்கள் அல்லது நோய்த்தொற்றுகளைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், இதயத்தின் தசைகள், வால்வுகள் மற்றும் இரத்த ஓட்டத்தின் செயல்பாட்டைப் பரிசோதித்தல்,, தைராய்டு சுரப்பியில் உள்ள கட்டிகள் மற்றும் மார்பகங்களில் ஏற்படும் அசாதாரண திசு மாற்றங்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது உள்ளிட்ட பல முக்கிய மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.