குருக்கள்மடம் மனிதப் புதைகுழிப் பகுதியை ஸ்கேனிங் நடவடிக்கைக்கு உட்படுத்தியமை தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையின்போது ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்தார்.
1990ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தொடர்புடைய வழக்கு விசாரணை திங்கட்கிழமை (18) களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அதன்போது சமுகமளித்திருந்தனர். குருக்கள்மடம் மனித புதைக்குழி தொடர்பான வழக்கில் 14ஆம் திகதி நீதிமன்றினால் ஆக்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக கடந்த 15,16,17ஆம் திகதிகளிலே பேராசிரியர் ராஜ் சோமதேவா தலைமையிலான நிபுணத்துவக் குழுவினால் குறித்த மனித புதைகுழி அமையப்பெற்றுள்ளதாக நம்பப்படுகின்ற அந்த இடத்திலேயே Magneto telluric audio frequency முறையை பயன்படுத்தி ஸ்கேனிங் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
அந்த அடிப்படையில் ஸ்கேனிங் தொடர்பான விடயங்களை நீதிமன்றத்துக்கு அறிவிப்பதற்காக இன்றைய தினம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டிருந்தது.
இவ்வழக்கின் பிரத்தியட்சக முறைப்பாட்டாளரான ரவூப் அப்துல் மஜீத் சார்பாக ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் கூறுகையில், குறித்த அந்த ஸ்கேனிங் நடவடிக்கைகள் தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அதன் பிற்பாடு குறித்த வழக்கு எதிர்வருகின்ற 26 ஆம் திகதி வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக திறந்த நீதிமன்றத்திலே அழைக்கப்படவிருக்கிறது என்றார்.