பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டங்களை கொண்டுவருவதற்கான அரசாக்கத்தின் அடிப்படை நோக்கம் குறித்து எமக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை. எனினும், அது வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ள விதத்திற்கு அமைய நிறைவேற்றப்பட்டால் சாதாரண மக்களின் சுதந்திரம் கடுமையான அபாயத்திற்குள்ளாகும் என்பது எமது நம்பிக்கையாகும். எனவே, இந்த சட்டமூலங்களை மீளாய்வு செய்வதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ராேஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

புதிய சட்டங்களை அமைக்கும்போது பிரஜைகளின்  உரிமைகள் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும் எனும் தலைப்பில்  ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்குத் தாங்கள் உள்ளிட்ட தற்போதைய அரசாங்கம் எடுக்கும் முயற்சிக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். அதேவேளை, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் அடிப்படைப் பொறுப்பாகும் என்பதுடன், பயங்கரவாதச் செயல்கள் மூலம் மக்களின் உயிர்களை அழித்தல், அரச மற்றும் தனிப்பட்ட சொத்துக்களை சேதப்படுத்தல், போதைப்பொருட்களிலிருந்து சமூகத்தையும் இளைஞர் சமூகத்தையும் பாதுகாத்தல், நாட்டின் பொருளாதாரத்திற்கு சேதம் விளைவித்தல் மற்றும் மக்கள் மத்தியில் பயத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துவதைத் தடுப்பதற்கு வலுவான சட்டக் கட்டமைப்பு இருக்க வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம். அதற்காக தங்களது அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளதுடன், அது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் நாம் நம்புகிறோம்.

எனினும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் ஊடாகப் பிரஜைகளின் அடிப்படை உரிமைகள், கருத்துச் சுதந்திரம், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடும் உரிமை மற்றும் நீதிமன்ற சுதந்திரம் என்பன தேவையற்ற விதத்தில் கட்டுப்படுத்தப்படக் கூடாது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்" மற்றும் "ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலம்" தொடர்பில் தங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் போது, தேசிய மக்கள் சக்தி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகப் உறுதியளித்திருந்தது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.  அத்துடன், ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை மீண்டும் வழங்குவதற்கான நிபந்தனையாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு இலங்கை சம்மதித்துள்ளது.

மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக 2021 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் நிபுணர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முன்நிபந்தனைகளுக்கு மத்தியில் உள்ள, கருத்துச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்று கூடும் சுதந்திரம், நிறுவனங்கள் அமைக்கும் சுதந்திரம் மற்றும் மதம் அல்லது நம்பிக்கையைக் கடைப்பிடிக்கும் சுதந்திரம் போன்ற உரிமைகள் மீது இந்தச் சட்டம் மூலம் தாக்கம் ஏற்படக்கூடும்.

அத்தகையதொரு நிலையில் புதிய சட்டம் மூலம் மக்களின் உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவது தொடர்பிலும், நாட்டின் அபிவிருத்தி மீது தாக்கங்கள் ஏற்படுவதற்கான அபாயம் ஏற்படலாம் என்பது எமது  கருத்தாகும். மேலும், புதிய முன்மொழியப்பட்ட சட்டத்தில் உள்ள பின்வரும் விடயங்கள் சர்ச்சைக்குரியவை எனச் சுட்டிக்காட்டலாம்.

இந்தச் சட்டம் மூலம் பயங்கரவாதம் என்பது தொடர்ந்தும் மிக விரிவான முறையில்  வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளதுடன், அமைதியான போராட்டங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகள், மானிதாபிமான மற்றும் மருத்துவ உதவிகளை வழங்குதல் என்பவற்றைப் பயங்கரவாதக் குற்றங்களிலிருந்து பிரித்துக் காட்டுவதற்கு சட்டமூலம் தவறியுள்ளது.

புதிய சட்டமூலத்தின் 3 ஆம் பிரிவு பயங்கரவாதம் தொடர்பான அடிப்படை வரைவிலக்கணத்துடன் தொடர்புடையது என்பதுடன், அதில் குறிப்பிடப்பட்டுள்ள "குறிப்பிடத்தக்க பொருளாதாரச் சேதத்தை" ஏற்படுத்தும் சாத்தியம் போன்ற ஒரு விடயம் பயங்கரவாதத்தைத் தீர்மானிக்கும் அடிப்படையாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அது எந்த சூழ்நிலைகளுக்குப் பொருந்தும் என்பது குறித்து துல்லியமாகக் கவனத்திற்கொள்ள வேண்டும். உதாரணமாக, அமைதியான போராட்டம், அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிரான போராட்டம் அல்லது பொருளாதாரக் கொள்கையை மாற்றியமைக்குமாறு கோரும் மக்கள் இயக்கம் காரணமாக ஏதாவது பொருளாதார தாக்கம் ஏற்படலாம். எனினும், அத்தகைய பொருளாதார தாக்கம் ஏற்பட்ட மாத்திரத்தினால் அந்தச் செயலை பயங்கரவாதச் செயலாக வரைவிலக்கணப்படுத்துவது நியாயமானதல்ல.

எட்டாவது பிரிவில் உள்ள "தடைசெய்தல் அல்லது தலையீடு செய்தல்", "நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருத்தல்" ஆகிய பதங்களை விரிவான முறையில் வரைவிலக்கணப்படுத்த முடியும் என்பதால், பயங்கரவாதமற்ற செயல்களும் பயங்கரவாதச் செயல்களாக வரைவிலக்கணப்படுத்தப்படுவதற்கான அபாயம் உள்ளது.

பதினைந்தாவது பிரிவில் உள்ள தகவல்களை வழங்காமை குற்றமாக மாறுவது என்ற பிரிவின் வரைவிலக்கணம் மிகவும் விரிவானது என்பதுடன், நோக்கப்பூர்வமாகப் பயங்கரவாதச் செயல் தொடர்பான குறிப்பிட்ட தகவல்களை மறைப்பது எனத் தெளிவான வரம்புடன் குறிப்பிடப்பட வேண்டும்.

பத்தாவது பிரிவில் உள்ள பயங்கரவாதப் பிரசுரங்கள், இந்தப் பிரிவும் மிக விரிவாகவும் பாரபட்சமான முறையிலும் வரைவிலக்கணப்படுத்தப்படக் கூடிய பிரிவாகும். இதன் மூலம் அமைதியான போராட்டம் ஒன்றுக்காக மக்களுக்கு அழைப்பு விடுத்த பிரகடனம் ஒன்றைக் கூடப் பயங்கரவாதச் செயலாக வரைவிலக்கணப்படுத்தும் சாத்தியம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறாயின் மக்களின் பேச்சு மற்றும் வெளியீட்டுச் சுதந்திரம் இதனால் கட்டுப்படுத்தப்படும்.

பத்தொன்பதாவது பிரிவு மூலம் இருந்த சட்டத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் மற்றும் கடமைகள், முப்படை அதிகாரிகளுக்கும் கரையோரப் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், அதனூடாக பிடியாணை இன்றி கைது செய்யும் அதிகாரம் அந்தப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்புக்காக இருக்கும் பொலிஸ் அதிகாரிகளின் அதிகாரம் ஏனைய பாதுகாப்புப் பிரிவுகளுக்கு வழங்குவதும், இருந்த சட்டத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் எழுத்துமூல உத்தரவின் பேரில் பொலிஸ் பரிசோதகர் அல்லது அதற்கு மேற்பட்ட அதிகாரியால் கைது செய்யப்பட வேண்டும் என இருந்த ஒப்பிட்டுக் கூறத்தக்க ஏற்பாடுகள் இந்தச் சட்டத்தில் இல்லாமை பாரதூரமான நிலையாகும்.

இருபத்தாறாவது பிரிவு மூலம் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரைத் தடுத்து வைக்கும் உத்தரவுகளின் கீழ் ஒரு வருட காலத்திற்குத் தடுத்து வைப்பதற்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிமன்ற அதிகாரம் நிர்வாக அதிகாரி ஒருவரிடம் ஒப்படைக்கப்படுவதன் மூலம்  நீதிமன்ற மேற்பார்வை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நாற்பத்தொன்பதாவது பிரிவு மூலம் நீதிமன்ற மேற்பார்வை இன்றி அரச பகுப்பாய்வாளருக்குப் பரிசோதனைப் பொருட்களை அனுப்புவதற்காக பொலிசாருக்கு அதிகாரங்கள் வழங்கப்படுவதன் மூலம் நீதிமன்ற தலையீடு கட்டுப்படுத்தப்படுவதும்  பிரச்சினையானது.

முப்பத்தொன்பதாவது பிரிவு மூலம் குறிப்பிடப்பட்டுள்ள தடுத்து வைக்கும் உத்தரவுகளை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்படும் சுயாதீனக் குழுவை அமைச்சரே நியமிப்பதன் மூலம் அதன் சுயாதீனம் தொடர்பில் பிரச்சினைகள் எழுகின்றன.

அறுபத்தோறாவது பிரிவு மூலம் எந்தவொரு இடத்தையும் "தடைசெய்யப்பட்ட இடம்" எனப் பெயரிடுவதற்கு பாதுகாப்புச் செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், நபர் ஒருவரின் நடமாட மற்றும் தொடர்பாடல் என்பவற்றை மூன்று மாதங்கள் வரை கட்டுப்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவு ஒன்றைப் பெறுவதற்குப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு இயலுமை உள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட நீதிமன்ற மேற்பார்வை அல்லது நீதிமன்ற மேற்பார்வை இன்றி பயன்படுத்தப்படக்கூடிய இத்தகைய பரந்த அதிகாரங்கள் மூலம் கருத்துச் சுதந்திரம், நிறுவனம் அமைத்தல், ஒன்று கூடுதல் மற்றும் நடமாடும் சுதந்திரம் என்பவற்றின் மீது கடுமையான தடைகள் மற்றும் பாதகமான தாக்கம் ஏற்படும்.

மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டமூலத்தின் கீழும் அத்தகைய பிரச்சினைகள் பல தோற்றம் பெற்றுள்ளதுடன், அது தொடர்பிலும் தங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறோம்.

இந்தச் சட்டமூலம் ஊடாக சிறிய குற்றங்களைக் கூட "பாரிய குற்றங்கள்" என வகைப்படுத்தப்பட்டுள்ளமை, புலமைச் சொத்துக்கள், பதிப்புரிமை மீறல்கள், மதுவரி மற்றும் வனப் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள் போன்ற சாதாரண குற்றங்கள் கூட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களாக வரைவிலக்கணப்படுத்தப்படுவதற்கான அபாயம் காணப்படுகின்றமை.

அமைச்சு செயலாளரின் உத்தரவுகளின் பேரில் ஒரு வருட காலம் வரை நபர்களை தடுத்து வைப்பதற்கான அதிகாரம் கிடைப்பதன் மூலம் நீதிமன்ற தலையீடு கட்டுப்படுத்தப்படுகின்றமை, தொழிற்சங்க நடவடிக்கைகள், அமைதியான போராட்டங்கள் இந்தச் சட்டத்தின் தாக்கத்திற்கு உள்ளாகக் கூடுவதோடு, அதன் மூலம் சிவில் சமூக அடக்குமுறைக்கான அபாயம் தோற்றம் பெறுகின்றமை.

பொலிஸ் காவலில் பெறப்படும் வாக்குமூலங்களைச் சாட்சியாக ஏற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் மூலம் சந்தேகநபர்களின் நியாயமான வழக்கு விசாரணைக்கான உரிமை இழக்கப்படுகின்றமை.

எந்தப் பின்னணியின் கீழ் ஆயினும் அரச நிர்வாகத்தில் தாங்கள் மக்கள் மீது கொண்ட தோழமையான பாணியிலேயே தொடர்ந்தும் செயற்படுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். அத்துடன், இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான அரசாக்கத்தின் அடிப்படை நோக்கம் குறித்து எமக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்பதையும் குறிப்பிடுகிறோம். எனினும், அது வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ள விதத்திற்கு அமைய நிறைவேற்றப்பட்டால் சாதாரண மக்களின் சுதந்திரம் கடுமையான அபாயத்திற்குள்ளாகும் என்பது எமது நம்பிக்கையாகும். எனவே, இந்த சட்டமூலங்களை மீளாய்வு செய்வதற்கு ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.