அரசாங்கத்தின் நடவடிக்கைகளானது வாகனத்தின் இடதுபுற திருப்பு சைகையைக் காட்டி வலது புறம் திருப்புவதை போல அரத்தமற்றதென அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினரால் வெள்ளிக்கிழமை (30) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் கலந்துக் கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

இன்றைய தினம் நாடாளாவிய ரீதியில் அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்துள்ளனர். குறிப்பாக அரச பல்கலைக்கழகங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கடந்த பல மாதங்களாக நாம் அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளோம். எனினும், இதுவரை எமக்கு எவ்வித தீர்வுகளும் கிடைக்கவில்லை. குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் பல்கலைக்கழக மாணவர்களின் உள்ளீர்ப்பானது இரட்டிப்பாகியுள்ளது. 2015-இல் 25,000 ஆக இருந்த மாணவர் உள்ளீர்ப்பானது, தற்போது 43,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

ஆனால், கடந்தக் காலங்களில் 5800 - 6,000 ஆக இருந்த விரிவுரையாளர்களின் எண்ணிக்கை தற்போது 5,400 ஆகக் குறைந்துள்ளது. பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்தைப் பேணுவதற்கு 12,000-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் தேவைப்படும் நிலையில், தற்போது காணப்படும் விரிவுரையாளர்களின் எண்ணிக்கையைவ தை;து பார்க்கும் போது பாரிய வெற்றிடம் நிலவுகின்றதை காட்டுகின்றது.

மேலும், நாட்டின் அடிப்படை உரிமையாக கருதப்படும் இலவசக் கல்வி முறைமையானது தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. தற்போதைய அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இருந்தும், அரசாங்கம் எங்களது பிரச்சினைகளுக்கு செவிச்சாய்க்க மறுக்கின்றது. நாங்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்களது பிரச்சினைகள் மட்டுமல்ல.

இது நாட்டின் பொது மக்களின் பிரச்சினையுமாகும். குறிப்பாக, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பல்கலைக்கழகங்களுக்கு சேர்க்க நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனாலேயே 2025-ஆம் ஆண்டிற்கான மாணவர் உள்ளீர்ப்பை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தவே இன்று பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே, குறித்த பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாகத் தீர்வை வழங்க வேண்டும். இல்லையென்றால், நாட்டின் கல்வியைப் பாதுகாக்கும் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்துப் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றார்.