ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு சட்டமூலமானது பொலிஸாருக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்கியுள்ளதுடன் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷன் சந்திரஜித் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வியாழக்கிழமை (22) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த நவம்பர் 06ஆம் திகதி அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு சட்டமூலம்' தொடர்பாக கூற வேண்டிய தேவையுள்ளது. குறித்த இந்தச் சட்டமூலம் நாட்டில் அதிகரித்து வரும் கொலைகள், ஆட்கடத்தல்கள், பாதாள உலகக் குழுக்களின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காகவே கொண்டுவரப்படுவதாக அரசாங்கம் நியாயப்படுத்தினாலும், அதன் பின்னணியில் மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் சூழ்ச்சி மறைந்துள்ளது.

குறிப்பாக இந்தச் சட்டமூலத்தின் மூலம், பணத்தினையோ அல்லது வேறு சலுகைகளையோ பெறும் நோக்கில், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து தொடர்ச்சியாக ஏதேனும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டால், அவர்கள் 'குற்றக் கும்பலாக' கருதப்படுவர். மேலும், நான்கு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் சிறைத்தண்டனை பெறக்கூடிய குற்றங்கள் 'பாரிய குற்றங்கள்' என இச்சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்குத் தடை ஏற்படுத்துதல், உரிமமற்ற சூதாட்டம் மற்றும் திருட்டு போன்றவையும் இத்தகைய பாரிய குற்றங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  குறிப்பாக பொலிஸ் தொடர்பாக குறிப்பிட்டுள்ளதன்படி மக்கள் தங்களின் உரிமைகளுக்காக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்யும்போது, பொலிஸாரின் உத்தரவை மீறினால் அது பொலிஸ் கடமைக்குத் தடையாக உள்ளதென, பொலிஸாரினால் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும். ஏலவே நாட்டில் பொலிஸார் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதை அவதானிக்க முடிகின்றது. புதிய சட்டமூலத்தின் ஊடாக மீண்டும் பொலிஸாருக்கு எல்லையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு சட்டமூலத்தின் 17ஆவது பிரிவின்படி சந்தேகத்தின் பேரில் எவரையும் எந்த நேரத்திலும் கைது செய்யவும் சோதனையிடவும் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், 20 (1) பிரிவின்படி முன்னர் 24 மணி நேரமாக இருந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் கால அறவு 72 மணி நேரமாக (மூன்று நாட்களாக) நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிமன்ற விசாரணை ஏதுமின்றி பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் எவரையும் தடுப்புக் காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்க முடிவதுடன், நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட ஒருவரைக் கூட மேலதிக விசாரணை என்ற பெயரில் மீண்டும் பொலிஸ் நிலையத்தில் ஆறு மாதங்கள் வரை தடுத்து வைக்க முடியும் எனவும் 25ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய எல்லயற்ற அதிகாரங்கள் மக்களின் அடிப்படை ஜனநாயக சுதந்திரத்தை முழுமையாகப் பறிக்கும் செயலாகும்.

குறித்த சட்டமூலத்தினை எளிமையாக விளக்க வேண்டுமானால் 'ஒரு லொறியின் முன்பகுதியில் 'தெருவன் சரணாய்' (கடவுளின் துணை) என்று எழுதிவிட்டு, அதன் உள்ளே மாடுகளை வெட்டுவதற்காக ஏற்றிச் செல்வதைப் போன்றது' ஆகும். மேலோட்டமாகக் குற்றங்களை தடுப்பது போல் காட்டினாலும், உள்ளே மக்களின் ஜனநாயக உரிமைகளையும் இளைஞர்களின் குரல்வளையையும் நெரிப்பதே இதன் உண்மை நோக்கமாகும். அரசாங்கம் மக்கள் எதிர்ப்பை அடக்குவதற்கும், தங்களின் தவறுகளை மூடிமறைப்பதற்கும் இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இச்சட்டமூலத்திற்கு எதிராக எந்தவித நிபந்தனையுமின்றிப் போராடவும் மக்களை அணிதிரட்டவும் தாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.