செம்மணியை அண்மித்த மயானப் பகுதியில் ஏனையோரிடம் கூறி, அவர்கள் மூலம் உடல்களைப் புதைத்தமையினால் தன்னால் அவற்றை அடையாளம் காண்பிக்க முடியாது என்றும், உடல்கள் புதைக்கப்பட்ட ஏனைய பகுதிகளை அடையாளம் காண்பிக்க முடியும் என்றும் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி தன்னிடம் வாக்குமூலம் பெறுவதற்கு வருகைதந்திருந்த குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளிடம் தான் கூறியதாக பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரணதண்டனை அனுபவித்துவரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ அவரது குடும்பத்தினர் ஊடாக மீளுறுதிப்படுத்தியுள்ளார்.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டவரும், செம்மணி மனிதப்புதைகுழி பற்றிய உண்மைகளை முதன்முதலில் வெளிப்படுத்தியவருமான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு கடந்த செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முன்வைத்த கோரிக்கைக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

அதனையடுத்து கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் மரணதண்டனைக்கைதி சோமரத்ன ராஜபக்ஷவை சென்று சந்தித்த குற்றப்புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் குழுவினர், அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவுசெய்தனர்.

இந்நிலையில் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியபோது 'மயானத்தில் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதிகளையும், உடல்கள் புதைக்கப்பட்ட ஏனைய இடங்களையும் வௌ;வேறாக அடையாளம் காண்பிக்க முடியுமா?' என்று அவர்கள் கேட்டதாகவும், அதற்கு 'மயானத்தில் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதிகளை வேறாக அடையாளம் காண்பிக்க முடியாது.

இருப்பினும் மயானத்தில் உடல்கள் புதைக்கப்பட்டன. அதேபோன்று படையினரால் உடல்கள் புதைக்கப்பட்டன என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மயானப் பகுதியில் ஏனையோரிடம் கூறி, அவர்கள் மூலம் உடல்களைப் புதைத்தமையினால் என்னால் அவற்றை அடையாளம் காண்பிக்க முடியாது. உடல்கள் புதைக்கப்பட்ட ஏனைய பகுதிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும்' என்று பதிலளித்ததாகவும் சோமரத்ன ராஜபக்ஷ அவரது குடும்பத்தார் மூலம் மீளுறுதிப்படுத்தியுள்ளார்.

அதனையடுத்து 'ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் தான் அந்த இடங்களை அடையாளம் காட்டுவீர்களா?' என குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் வினவியதாகவும், அதற்கு 'ஆம், ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் அல்லது இவ்வழக்கு மீண்டும் முழுமையான விசாரணைக்காகக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டால் தான் அவற்றைக் காண்பிப்பேன்' என்று பதிலளித்ததாகவும் சோமரத்ன தெரிவித்துள்ளார்.  

அதேபோன்று 'விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டதாக நான் கூறவில்லை. மாறாக விடுதலைப்புலிகள் எனப் படையினரால் சந்தேகிக்கப்பட்டவர்கள் மற்றும் சாதாரண மக்களின் உடல்களே புதைக்கப்பட்டதாகவும், அவர்களின் உடல்களே புதைப்பதற்காக எம்மிடம் கொண்டுவந்து தரப்பட்டதாகவுமே நான் கூறினேன். நான் மயானத்துக்கு அப்பாற்பட்ட இடங்களிலேயே உடல்களைப் புதைத்தமையினால், மயானத்தில் உடல்கள் புதைக்கப்பட்ட பகுதிகளை என்னால் அடையாளம் காண்பிக்க முடியாது என்றே கூறினேன்' எனவும் சோமரத்ன ராஜபக்ஷ அவரது குடும்பத்தார் ஊடாக தெளிவுபடுத்தியுள்ளார்.

இருப்பினும் செம்மணி-சித்துபாத்தி மனிதப்புதைகுழி வழக்கு விவகாரத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விதமாக கடந்த வியாழக்கிழமை (19) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வின்போது, சோமரத்ன ராஜபக்ஷவிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலம் தொடர்பில் பிரஸ்தாபித்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், தான் யாழ்ப்பாணத்தில் இராணுவ சிப்பாயாகப் பணியாற்றிய காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்கள் அப்பகுதியில் புதைக்கப்பட்டதாகவும், அதனைத் தான் கண்டதாகவும், இருப்பினும் தற்போது அதனை அடையாளம் காண்பிக்கமுடியாது எனவும் சோமரத்ன ராஜபக்ஷ கூறியதாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.