இலங்கையை அண்மித்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற வானிலை மேலும் தொடரும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டின் பல மாகாணங்களுக்கும் மாவட்டங்களுக்கும் இன்று (13) பிற்பகல் 3.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் தயாராக இருப்பதற்கான மஞ்சள் நிறத்திலான அவசர வழிகாட்டி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மாகாணங்களுக்கும், திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் இந்த கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

200 மி.மீ க்கும் அதிகமான மிகக் கனமழை

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிகக் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, வட மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவான மழைவீழ்ச்சி விபரங்கள்

இதேவேளை, நேற்று (12) காலை 8.30 மணி முதல் இன்று (13) காலை 6.30 மணி வரையிலான கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் கெஸ்பேவ பகுதியில் அதிகூடியாக 204.0 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனைத் தவிர, கம்பஹா மாவட்டத்தின் வேயங்கொட பகுதியில் 145.5 மி.மீ மழைவீழ்ச்சியும், இரத்தினபுரி மாவட்டத்தின் கிலிமலே பகுதியில் 121.0 மி.மீ மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. கம்பஹாவின் வத்துபிட்டிவல (105.5 மி.மீ), காலியின் தேவிதுர தோட்டம் (102.5 மி.மீ), களுத்துறையின் பண்டாரகம (102.5 மி.மீ) மற்றும் ஹொரண (101.5 மி.மீ) ஆகிய பகுதிகளிலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

இடியுடன் கூடிய பலத்த மழையின் போது தற்காலிகமாக கடுமையான காற்றும், ஆபத்தான மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றினால் ஏற்படக்கூடிய விபத்துக்கள் மற்றும் பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.

பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர செயல்பாட்டுப் பிரிவு மற்றும் 117 என்ற அவசர அழைப்பு இலக்கம் ஆகியன 24 மணி நேரமும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு 0112136136 மற்றும் 0112136222 ஆகிய இலக்கங்களைத் தொடர்பு கொள்ள முடியும்.