நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்களும், 17 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (13) செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி நிலவரப்படி இந்தத் தரவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
பல மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள் அதன் கொள்ளளவைத் தாண்டி வான்பாய்ந்து கொண்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம்: இராஜாங்கனை நீர்த்தேக்கம்.
பதுளை: அம்பேவல நீர்த்தேக்கம்.
அம்பாந்தோட்டை: மௌ ஆரா, லுணுகம்வெஹெர, திஸ்ஸ வாவ், வீரவில, யோத வாவ் மற்றும் வெஹெரகல நீர்த்தேக்கங்கள்.
குருநாகல்: அம்பகொல வாவ், உஸ்கல சியம்பலகமுவ, மாகல்ல மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்கள்.
கண்டி/மாத்தளை: நாலந்தா மற்றும் வேமெடில்ல நீர்த்தேக்கங்கள்.
மொனராகலை: அலிகொட்ட ஆரா நீர்த்தேக்கம்.
மன்னார்: யோத வாவ்.
அதிகரித்து வரும் நீர்மட்டம் காரணமாகப் பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டு, ஒரு செக்கனுக்கு 14,000 கன அடிக்கும் அதிகமான நீர் கலா ஓயாவிற்குள் வெளியேற்றப்படுகிறது.
லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தில் 06 வான் கதவுகள் ஊடாக செக்கனுக்கு 4,100 கன அடிக்கும் அதிகமான நீர் கிரிந்தி ஓயாவிற்குள் விடப்படுகிறது.
வெஹெரகல நீர்த்தேக்கத்தில் 06 வான் கதவுகள் திறக்கப்பட்டு செக்கனுக்கு 2,400 கன அடிக்கும் அதிகமான நீர் மாணிக்க கங்கையில் கலக்கிறது.
ஆறுகள் மற்றும் நீரோடைகளை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களும், தாழ்நிலப் பகுதிகளில் உள்ள சமூகங்களும் நீர்மட்டம் உயரும் அபாயம் இருப்பதால் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசன அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.