முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பகுதியில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளை மீண்டும் உரியவர்களிடம் கையளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 6.05 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணி விடுவிப்பு நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் முன்னிலையில், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சுஜிபா சிவதாஸ் அவர்களிடம், முல்லைத்தீவு இராணுவப் பொறுப்பதிகாரி பிரிகேடியர் அவர்களால் காணி விடுவிப்பு ஆவணம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளை மீண்டும் உரிய உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், கேப்பாபிலவு காணி விடுவிப்பு நடவடிக்கை அப்பகுதி மக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
நீண்டகாலமாகத் தமது பூர்வீகக் காணிகளை மீளப்பெறுவதற்காகக் காத்திருக்கும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், விடுவிக்கப்பட்ட காணிகள் உரிய மக்களிடம் முழுமையாகக் கையளிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.