1255.7 கிராம் கொக்கைன் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்தமை, கடத்தியமை உள்ளிட்ட  5  குற்றச்சாட்டுகளின் கீழ், போதைப்பொருள் கடத்தல்காரர் என அறியப்படும் மொஹமட் ஷிரான் பாசிக் உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின், வழக்கு விசாரணைக்கு முன்னரான ஒன்று கூடல் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி இடம்பெறும் என  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நயோமி விக்ரமசேகர உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜோஹான் பே, ஐ. டீ. சுமித் மற்றும் மூன்றாவது எதிர்வாதியான ஷிரான் பாசிக் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் சார்பில்  மூன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி விடயங்களை முன்வைக்கையில், குறித்த வழக்கின், வழக்கு விசாரணைக்கு முன்னரான ஒன்று கூடல்  புதன்கிழமை (11) நடத்தப்படவிருந்த போதிலும், இந்த வழக்குடன் தொடர்புடைய மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்திலுள்ள  சிசிடிவி காட்சிகள் அடங்கிய இருவெட்டின் பிரதியைப் பெற்றுக்கொள்ள முடியாது போனதாகத் தெரிவித்தார்.

குறித்த காட்சிகள் அடங்கிய இருவெட்டை உடனடியாக  நீதிமன்றத்திற்கு வழங்குமாறும், வழக்கு தொடர்பான அரச  பகுப்பாய்வாளரின் அறிக்கைகளையும்  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினால் ஷிரான் பாசிக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

முதல் பிரதிவாதியும் சிறைச்சாலை ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இரண்டாவது எதிர்வாதியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 16 ஆம் திகதி அன்று கொக்கைன் போதைப்பொருள் கடத்தியமை உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.