ஜனநாயக கொங்கோ குடியரசின் எக்குவாட்டூர் மாகாணத்தில் உள்ள கொங்கோ ஆற்றில் இரண்டு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு மாகாண உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிரிஸ்பின் முபுட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (03) அதிகாலை 2.00 மணியளவில் இக்வேட்டர் மாகாணத்தின் ங்கொம்பே நகருக்கு அருகில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
கின்ஷாசா மற்றும் எம்பண்டாக்கா ஆகிய நகரங்களுக்கு இடையே பயணித்த வர்த்தகப் படகொன்றும், மொங்கலா மாகாணத்திலிருந்து கின்ஷாசா நோக்கி 163 பயணிகளுடன் பயணித்த பயணிகள் படகொன்றும் மோதிக்கொண்டன. மோதிய வேகத்தில் பயணிகள் படகு ஆற்றில் மூழ்கியுள்ளது.
இதுவரை 22 சடலங்கள் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், 59 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பயணிகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
மூழ்கிய பயணிகள் படகு ஆற்றில் 12 மீற்றர் ஆழத்தில் மூழ்கிக் கிடப்பதாகவும், திங்கட்கிழமை மாலை வரையிலும் ஏனைய உடல்களை மீட்பதற்கான தேடுதல் பணிகள் தொடர்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொங்கோ ஆற்றுப் பிராந்தியத்தில் வீதி வசதிகள் குறைவாக உள்ளதால் ஆற்றுப் போக்குவரத்தே பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. எனினும், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றுவது மற்றும் முறையான பராமரிப்பின்மையால் அங்கு இவ்வாறான விபத்துகள் அடிக்கடி இடம்பெறுகின்றன.