அமெரிக்க கடற்படையின் USS Tulsa (LCS 16) கப்பல் இன்று புதன்கிழமை (7) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

Independence வகையைச் சேர்ந்த Littoral Combat Shipஆன இந்த USS Tulsa, இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

இந்த துறைமுக விஜயம், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால கடல்சார் கூட்டுறவையும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பை பேணுவதற்கான இரு நாடுகளின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் கூறுகையில், இலங்கைக்கு வருகை தரும் ஒவ்வொரு அமெரிக்கக் கப்பலும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவையும், இரு நாடுகளின் கடற்படை வீரர்களுக்கிடையிலான உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைகிறது என்றார்.

இலங்கை தொடர்ந்து அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு வழங்கி வரும் அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த அவர், இத்தகைய விஜயங்கள் நம்பிக்கையையும் உறவுகளையும் கட்டியெழுப்புவதுடன், இரு நாடுகளின் கூட்டுறவை வலுப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

USS Tulsa, இதற்கு முன்னர் 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தது.

தற்போதைய விஜயத்தின்போது எரிபொருள் நிரப்புதல் மற்றும் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொண்ட பின்னர், கப்பல் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது பணியைத் தொடரவுள்ளது.

கப்பல் விஜயங்கள், தொழில்சார் பரிமாற்றங்கள், பயிற்சிகள் மற்றும் Cooperation Afloat Readiness and Training (CARAT) போன்ற கூட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட நீண்டகால ஒத்துழைப்பின் தொடர்ச்சியாக இந்த விஜயம் இடம்பெறுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்புத் திறனை மேலும் மேம்படுத்துகின்றன.

வேகம் மற்றும் பல்துறை பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள USS Tulsa, ஆழம் குறைந்த கடற்பகுதிகளிலும் திறந்த கடலிலும் செயற்படக்கூடியது.

அமெரிக்காவின் மேம்பட்ட கடல்சார் திறன்களை பிரதிபலிக்கும் இந்தக் கப்பல், Alabama மாநிலத்தின் Mobile நகரில் Austal USA நிறுவனத்தால் கட்டப்பட்டது. தனித்துவமான மூன்று உடற்பகுதிகளைக் கொண்ட trimaran வடிவமைப்புடன் கூடிய இது, மணிக்கு 40 கடல் மைல்களுக்கு அதிகமான வேகத்தை எட்டக்கூடியது.

கப்பலின் விரிவான விமான தளம் மற்றும் மாற்றியமைக்கக்கூடிய பணியிடங்கள் மூலம் ஹெலிகொப்டர்கள், சிறிய படகுகள், ஆளில்லா அமைப்புகள், பணியாளர்கள் மற்றும் உபகரணங்களை பல்வேறு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த முடியும்.

கடல்சார் பாதுகாப்பு முதல் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் வரையிலான பல்வேறு பணிகளுக்கு இந்த வசதிகள் பயன்படுத்தப்படுகின்றன.

2019 பெப்ரவரி 16ஆம் திகதி San Francisco நகரில் சேவையில் இணைக்கப்பட்ட USS Tulsa, “Tough, Able, Ready” என்ற இலட்சிய வாசகத்துடன் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் செயற்பட்டு வருகிறது.