கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள மேற்கு கடலில் பயணித்த வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 17 வெற்றுக் கொள்கலன்கள் திடீரெனக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளன.

கடலில் மிதந்துகொண்டிருக்கும் இந்தக் கொள்கலன்கள் கரையை நோக்கி நகர்ந்து வரக்கூடிய அபாயம் காணப்படுவதால், அந்தப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு மீனவ மற்றும் நீரியல் வளத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்விபத்து கொழும்பு துறைமுகத்திலிருந்து மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில், இடம்பெற்றுள்ளது.

தற்போது அப்பகுதியில் நிலவிவரும் கடல் நீரோட்டத்தின் தன்மையைக் கருத்திற்கொள்ளும்போது, கடலில் மிதக்கும் இந்த வெற்றுக் கொள்கலன்கள் பேருவலையிலிருந்து நீர்கொழும்பு ஊடாக புத்தளம் வரையிலான பரந்த  கடற்கரைப் பகுதிகளை நோக்கி மிதந்து வர அதிக வாய்ப்புள்ளதாகத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.