நீர்கொழும்பு கடற்பகுதியில் ஆபத்தில் சிக்கியுள்ளதாக முறைப்பாடு அளிக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் மீனவர்கள் சிலரை மீட்பதற்காக, இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படை இணைந்து கூட்டு நடவடிக்கை ஒன்றைத் தொடங்கியுள்ளன.
இந்த மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, உதவி புரிவதற்காக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 412 (Bell 412) ரக ஹெலிகொப்டர் ஒன்றும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்துக்குள்ளான படகொன்றில் பயணித்த மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (31) பிற்பகல் மீன்பிடிக்கச் சென்ற டிங்கி படகு ஒன்று விபத்துக்குள்ளானதை, அவ்வழியாக சென்ற மற்றொரு படகு உறுதிப்படுத்தியது. எனினும், அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட முதற்கட்டத் தேடுதலில், மேலும் 3 மீன்பிடிப் படகுகள் காணாமல்போயிருப்பது தெரியவந்தது.
விபத்துக்குள்ளான படகில் சென்ற மீனவர் ஒருவரின் சடலம் நீர்கொழும்பு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதே படகில் பயணித்த மேலும் இரண்டு மீனவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
காணாமல்போன மீனவர்களையும் படகுகளையும் மீட்கும் வகையில் கடற்படையின் 'டோரா' படகு விசேட மூழ்கிச் செல்லும் (Diving) பிரிவினருடன் களமிறக்கப்பட்டுள்ளது.
வான்வழியிலான தேடுதலுக்காக விமானப்படைக்குச் சொந்தமான 'பெல் 412' (Bell 412) ஹெலிகொப்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வான் மற்றும் கடல் வழிகளில் மீட்புக் குழுவினர் தொடர்ந்தும் தீவிர தேடுதல் வேட்டையை முன்னெடுத்து வருகின்றனர்.