ஐக்கிய மக்கள் சக்தியின் அதன் தலைவர் சஜித் பிரேமதாசவை முடக்குவதற்கும் அரசியல் ரீதியாக அவரை அழிப்பதற்கும் கட்சிக்குள்ளேயே சில தரப்பினர் சதித்திட்டம் தீட்டி வருவதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வியாழக்கிழமை (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சுற்றி ஒரு குறிப்பிட்ட குழுவினர் சூழ்ந்து அவரை சிறைப்படுத்தி வைத்துள்ளனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஒன்றிணைக்குமாறு எதிர்கட்சியில் உள்ள ஒரு சிலரே கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். சஜித் பிரேமதாசவை திசை திருப்புவதற்காக கட்சிக்குள்ளேயே திட்டமிடப்படுகிறது என்று சந்தேகிக்கிறேன். மேலும் தனக்கு தெரியாமல் ரணில் விக்ரமசிங்கவின் கட்சியுடன் இணைந்து பிரதமராகவோ அல்லது அமைச்சர்களாகவோ பதவியேற்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறான தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் கட்சியின் செயற்குழு மற்றும் அமைப்பாளர்களை ஒன்றிணைத்து ஆலோசனை நடத்தப்பட வேண்டும்.
எதிர்வரும் ஜூன் மாத்தை இலக்கு வைத்து போயா தினத்தில் எரிபொருள் விலையை உயர்த்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது. அதற்கான எந்தவித உரிமையும் அவர்களுக்கு கிடையாது. எரிபொருள் கூட்டுத்தாபனம் கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் அதிகளவான இலாபத்தை ஈட்டியுள்ள போதிலும் பழைய கையிருப்புகளை அதிக விலைக்கு விற்பதுடன் எரிபொருள் இறக்குமதிகளின் பின்னணியில் பெருமளவிலான தரகுப்பண மோடிகள் இடம்பெற்று வருகிறது. அவை மக்களின் மீது சுமத்தப்படுகிறது.
மேலும் அரசாங்கத்தின் முக்கிய தலைவரான டில்வின் சில்வாவின் தற்போதைய கருத்துக்கள் மக்களின் உண்மையான நிலைப்பாட்டை நன்கு உணர வைத்துள்ளதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதை தடுப்பதற்கான புதிய சட்டங்களை அமுல்படுத்தவுள்ளன. தனக்குள்ள பயனத்தின் காரணமாகவே இவ்வாறான அவசர சட்டங்களை கொண்டு வர முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் பயத்தின் வெளிப்பாடு எதிர்கட்சியினரையும் பயமுறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
Geographic Reference