மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்திக்கு பணம் ஒரு பிரச்சனையாக அமையாது கொள்கையும் , தோல்வியும் தான் அவர்களை தேர்தலை நடத்துவதற்கு பின்னடிக்கிறது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
அண்மையில் ஜே வி பி என் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் மாகாண சபை தேர்தல் தொடர்பில் ஊடகவியலளர்கள் கேள்வி எழுப்பிய போது அரசாங்கத்திடம் பணம் இல்லை என தெரிவித்திருந்தார்.
ஆனால் தேர்தல் ஆணையாளர் அரசாங்கம் தேர்தலை நடத்துமாறு கேட்டால் அதனை நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் தயாராக இருக்கிறது என ஏற்கனவே அறிவித்திருந்தது.
இவ்வாறான ஒரு நிலையில் ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு மாகாண சபை தேர்தலை வைக்கும் எண்ணம் மிகக்குறைவாகவே இருக்கிறது.
காரணம் இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போது அதனை எதிர்த்து இனவாத செயற்பாடுகளை தூண்டி விட்டவர்கள் இந்த ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் கட்சியினர்.
மாகாண சபை முறைமை மூலம் மத்திய அதிகாரங்கள் மாகாணத்துக்கு செல்லக்கூடாது என்பதில் தெளிவாகவும் நாடு ஒற்றை ஆட்சியின் கீழ் இருக்க வேண்டுமென விரும்பியவர்கள் இந்த ஜேவிபியினர்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அதிகாரம் காணப்படுகின்ற நிலையில் மாகாண சபை தேர்தலை வைப்பதற்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது.
அவர்கள் பயப்படுகிறார்கள் என்றால் ஒன்றில் தமது கொள்கையிலிருந்து மாறவேண்டும் அல்லது போனால் தோல்வி ஏற்பட்டு விடும் என்ற பயம் காரணமாக தேர்தலை நடாத்தாது காலம் கடத்த முடியும்.
மாகாண சபை முறமையை அன்றிலிருந்து இன்று வரை ஆதரிக்கும் கட்சியாகவும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான வழி 13ஆம் திருத்தத்தின் ஊடாகவே அமையும் என உறுதியாக கூறிவரும் கட்சி எமது கட்சி.
தமிழ் மக்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உரிய முறையில் வழங்கப்பட்டால் பல பிரச்சனைகளுக்கு தீர்வைக் காண முடியும். ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு பணம் ஒரு பிரச்சனையே கிடையாது கொள்கையும் ,தோல்வி ஏற்பட்டு விடும் என்ற பயமுமே தேர்தலை நடாத்தாமல் காலம் கடத்தவதற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்தார்