சட்டவிரோத மதுபானத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, 2024இல் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பிலும் கேள்வி சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்குக் கடுமையான சட்டத் திருத்தங்கள் அவசியம் எனவும், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புதிதாக மதுபான விற்பனை நிலையங்களை அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அத்தகைய அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தெளிவான விளக்கமளிக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.
இன்று புதன்கிழமை (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சட்டவிரோத மதுபான உற்பத்தி, அதன் பாவனையால் ஏற்படும் சுகாதாரப் பாதிப்புகள், மதுபான வரிக் கொள்கை மற்றும் மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவது தொடர்பான பல்வேறு முக்கியமான பிரச்சினைகளை முன்வைத்தார்.
சட்டபூர்வமான மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிக வரிகள் காரணமாக அவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. இதனால் குறைந்த வருமானம் பெறும் மக்கள் குறைந்த விலையில் கிடைக்கும் சட்டவிரோத மதுபானங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான மதுபானங்களின் பாவனையால் நச்சுத்தன்மை, நிரந்தர உடல் இயலாமை மற்றும் மரணங்கள் ஏற்படக்கூடும் என்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை வழங்குவதற்காக அரசாங்கமும் மேலதிக செலவுகளை ஏற்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
எனவே, மதுபான வரிகள் மூலம் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வருடாந்த வருமானத்தையும், மதுபானப் பாவனையுடன் தொடர்புடைய நோய்கள், மருத்துவமனை அனுமதிகள், மரணங்கள் மற்றும் சிகிச்சைகளுக்காக அரசாங்கம் செலவிடும் தொகையையும் ஒப்பிட்டு ஆராய்வது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
சட்டவிரோத மதுபானக் குற்றங்களுக்கான தண்டனைகள் போதுமானவையா? சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தற்போது நடைமுறையில் உள்ள அபராதங்கள் மற்றும் சிறைத்தண்டனைகள் தொடர்பிலும் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.
குறிப்பாக, கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களும் தண்டனைகளும் போதுமானதாக இல்லை என அவர் சுட்டிக்காட்டினார். மீண்டும் மீண்டும் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகளை விதிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், 2025ஆம் ஆண்டு மற்றும் 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாவட்ட ரீதியாகப் பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத மதுபானக் குற்றங்கள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை, மீண்டும் குற்றங்களைச் செய்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கைப்பற்றப்பட்ட சட்டவிரோத மதுபானத்தின் அளவு ஆகிய விவரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் எனக் கோரினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியும் விற்பனையும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திராய்மடு பகுதியில் தர்ஷன் என்பவர் பகிரங்கமாக வடிசாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்ட அவர், அவருக்கு எதிராக இதுவரை உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் புதிய மதுபானசாலைகளுக்கு எதிர்ப்பு
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புதிதாக மதுபான விற்பனை நிலையங்களை அமைப்பதற்கான முன்மொழிவுகள் தொடர்பில் பிரதேச மக்களிடையே கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளமையையும் அவர் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்தார்.
கோயில்கள், பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களுக்கு அண்மையில் புதிய மதுபானசாலைகளை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் எதிர்ப்புகளையும் சமூக நலனையும் கருத்திற்கொள்ளாமல் மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்குவது பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களில் புதிய மதுபானசாலைகளை அமைப்பது முக்கிய இடம் பெறக்கூடாது எனத் தெரிவித்த அவர், இத்தகைய தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். 2024 செப்டெம்பர் மாதம் முதல் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முன்மொழியப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை, அவை அமைந்துள்ள இடங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலைமை தொடர்பான முழுமையான தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரினார். மேலும், புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்கும்போது பிரதேச மக்களின் கருத்துகள் மற்றும் எதிர்ப்புகள் முறையாகக் கவனத்தில் கொள்ளப்படுகின்றனவா என்பதற்கும் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
2024இல் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் கேள்வி
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் 2024ஆம் ஆண்டு வழங்கப்பட்டதாக வெளிப்படுத்தப்பட்ட 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பிலும் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்விகளை முன்வைத்தார். குறித்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் அரசியல் அனுசரணை மற்றும் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அவை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளிப்படுத்துவதாக தற்போதைய அரசாங்கம் வழங்கியிருந்த உறுதிமொழியின் முன்னேற்றம் குறித்து விளக்கமளிக்கப்பட வேண்டும் என்றார். அத்துடன், மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்கள் தொடர்பான சில விவரங்கள் ஊடகத்துறை அமைச்சரால் சபைக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த 361 அனுமதிப்பத்திரங்களின் தற்போதைய நிலைமை, அவற்றைப் பரிந்துரைத்த அரசியல்வாதிகள், அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்கள், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவுகள் மற்றும் இரத்துச் செய்யப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான முழுமையான பட்டியலைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அரசியல் இலஞ்சம் அல்லது சலுகைகளின் அடிப்படையில் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, வாக்குறுதியளிக்கப்பட்ட தகவல்கள் ஏன் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என்பன குறித்தும் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மதுபான வருமானம் மற்றும் சுகாதாரச் செலவுகள் தொடர்பில் ஆய்வு அவசியம்
அதிக மதுபான வரிகள் காரணமாகச் சட்டவிரோத மதுபானப் பாவனை அதிகரித்துள்ளதா என்பது தொடர்பில் அரசாங்கம் ஏதேனும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதா என்றும் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பினார்.
மதுபான வரிகள் மூலம் அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வருடாந்த வருமானம், மதுபானப் பாவனையுடன் தொடர்புடைய மருத்துவமனை அனுமதிகள், மரணங்களின் எண்ணிக்கை மற்றும் சிகிச்சைகளுக்காக அரசாங்கம் செலவிடும் தொகை ஆகியவற்றைத் தெளிவாக வெளியிட வேண்டும் என அவர் கோரினார். சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வெறுமனே கைது மற்றும் அபராதங்களுடன் மட்டுப்படுத்தப்படாமல், மீண்டும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படுவதுடன், மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் அமைய வேண்டும் என்பதே அவரது வலியுறுத்தலாக இருந்தது.
அரசாங்கத்திடம் ஆறு முக்கிய கேள்விகள்
இவ்விடயங்கள் தொடர்பில் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம் அவர் ஆறு முக்கிய கேள்விகளை முன்வைத்தார்.
சட்டவிரோத மதுபானக் குற்றங்களுக்கான தற்போதைய அபராதங்கள் மற்றும் சிறைத்தண்டனைகள், மீண்டும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகளை அதிகரிப்பதற்கான சட்டத் திருத்தங்கள், 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்கான மாவட்ட ரீதியான குற்றப் புள்ளிவிவரங்கள், மதுபான வருமானம் மற்றும் சுகாதாரச் செலவுகள், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களின் விபரங்கள், அத்துடன் 2024ஆம் ஆண்டு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் 361 அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான விசாரணைகள் ஆகியவற்றுக்கு விரிவான பதில்களை வழங்குமாறு அவர் கோரினார்.
சட்டவிரோத மதுபான உற்பத்தி மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்துவதும், மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படுவதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் சுகாதாரம், சமூக நலன் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பதைச் சாணக்கியன் இராசமாணிக்கம் தனது பாராளுமன்றக் கேள்விகள் மூலம் வலியுறுத்தியுள்ளார்.