நுகர்வோர் அதிகாரசபை வெளியிடும் விலை வரம்புகளுக்கும் சந்தை நிலவரத்திற்கும் இடையே பாரிய முரண்பாடு நிலவுவதுடன், சந்தையை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறதா அல்லது வர்த்தகர்கள் கட்டுப்படுத்துகிறார்களா? என்று தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாண் மற்றும் பேக்கறி பொருட்களின் விலை அதிகரித்ததை தொடர்ந்து வெள்ளிக்கிழமை (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோதுமை மாவின் விலையை அதிகரிக்க அனுமதிக்கப்போவதில்லை என்றும், நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதைக் கட்டுப்படுத்துவதாகவும் முன்னர் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்தபோதிலும், தற்போது மா விநியோக நிறுவனங்கள் மாவின் விலையை உயர்த்தியுள்ளன.

இதன்பயனாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கமும் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை உயர்த்தியுள்ளதுடன், நுகர்வோர் விவகார அதிகாரசபை இதுகுறித்து எதுவுமே பேசாமல் மௌனமாக இருக்கின்றது.

இந்த திடீர் விலை அதிகரிப்பானது பாணை மட்டும் பாதிக்காது, நாட்டின் ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக, நாட்டில் நிலவும் தொடர் மழைவீழ்ச்சி காரணமாகத் தங்களது அன்றாட வேலைவாய்ப்புகளையும் வருமானத்தையும் இழந்து தவிக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சேமிப்புப் பணம் எதுவுமின்றி இருக்கும் தோட்டத் தொழிலாளர்களால் ஒரு கோதுமை மா ரொட்டியைக் கூட வாங்கிச் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதிலும், பெருந்தோட்டக் கம்பனிகளாவது அவர்களுக்குக் குறைந்த விலையில் மா வழங்குவதற்கு முன்வரவில்லை.

பாணின் விலையைக் காட்டி ஆட்சியைக் கைப்பற்றிய அரசுகள் உள்ள நாட்டில், உயர்த்தப்பட்ட பாண் இறாத்தலின் சரியான எடை எவ்வளவு, அதன் விற்பனை விலை எவ்வளவு, மற்றும் பனிஸ் உள்ளிட்ட ஏனைய சிற்றுண்டிகளின் நியாயமான விலைகள் எவை என்பதை நுகர்வோர் விவகார அதிகாரசபை நாட்டிற்குத் தெளிவாக அறிவிக்க வேண்டும்.

உணவகங்களில் விற்கப்படும் பராட்டா, முட்டை ரொட்டி மற்றும் கொத்து ரொட்டி போன்ற உணவுப் பொருட்களின் விலைகளும் கட்டுப்பாடின்றிக் கூடும் அபாயம் நிலவுவதால், நுகர்வோர் வாங்கும் உணவுகளுக்கான சரியான எடையையும் விலையையும் அரசாங்கம் உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்த வேண்டும்.

மேலும், சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ 400 ரூபா வரை உயர்ந்துள்ளது. விவசாயிகள் தங்களது வெங்காயப் பயிர்களைக் குறைந்த விலைக்கு அறுவடை செய்து விற்ற பின்னர், தற்போது சந்தையில் கிலோ 360 முதல் 400 ரூபா வரை விற்கப்படுவதால் கிடைக்கும் அதிகளவான இலாபம் விவசாயிகளுக்கோ நுகர்வோருக்கோ செல்லாமல், களஞ்சியசாலைகளில் பொருட்களைச் சேமித்து வைத்துள்ள இடைத்தரகர்களுக்கே செல்கின்றது.

அதிகாரசபை வெளியிடும் விலை வரம்புகளுக்கும் சந்தை நிலவரத்திற்கும் இடையே பாரிய முரண்பாடு நிலவுவதுடன், சந்தையை அரசாங்கம் கட்டுப்படுத்துகிறதா அல்லது வர்த்தகர்கள் கட்டுப்படுத்துகிறார்களா?.

எனவே, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், அரசமைப்புத் திருத்தங்கள் மற்றும் தேவையற்ற அரசியல் விவாதங்களில் கவனத்தைச் செலுத்தாமல், மக்கள் அன்றாடம் உழைக்கும் பணத்திற்குத் தரமான உணவுப் பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்யும் சட்டங்களை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயர்த்தப்பட்ட பாண் மற்றும் வெங்காய விலைகளின் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்களையும், பொருட்களின் சரியான எடையையும் விலையையும் நாட்டு மக்களுக்கு உடனடியாக வெளிப்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு கோரிக்கை விடுத்தார்.