பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு  1750 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளபோதும், பெருந்தோட்ட நிறுவனங்களால் தோட்டங்களின் முகாமையாளர்களுக்கு அது தொடர்பான சுற்றுநிருபங்களை அனுப்பாத காரணத்தால் அந்த சம்பள அதிகரிப்பை வழங்குவதில் தோட்ட நிர்வாகங்கள் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளன.

அதனால் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி அது தொடர்பான சுற்று நிருபதை அனுப்பிவைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) இடம்பெற்ற மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தாெடர்ந்து உரையாற்றுகையில்,

தோட்டத் தொழிலாளர்களுக்கான  1750 ரூபா அடிப்படை சம்பளம் தொடர்பில் அரசாங்கம் அறிவித்திருந்தது. ஜனவரி 10ஆம் திகதியில் இருந்து கணக்கிடப்பட்டு பெப்வரி மாதத்தில் கிடைக்கும் என்றும் இதில் பெருந்தோட்ட நிறுவனத்தின் ஊடாக 200 ரூபாவின் ஊடாகவும் 200 ரூபா அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுவரையில் பெருந்தோட்ட நிறுவனங்களால் அவர்களின் தோட்ட முகாமையாளர்களுக்கு இது தொடர்பான சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்படவில்லை சுற்று நிருபத்தை அனுப்பினாலே சம்பளத்தை வழங்க முடியும் என்றும் தோட்ட முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அந்த சுற்றுநிருபத்தை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம். இதேவேளை, எக்காரணம் கொண்டும் ஒருநாள் பெயருக்கு 18 கிலோ கொழுந்து என்பதில் மாற்றம் இருக்கக் கூடாது. மறைமுகமாகக்கூட அது அதிகரிக்கப்பட்டுவிடக்கூடாது. அத்துடன் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஒன்றரை நாள் பெயர் வழங்கப்படும். அதிலும் மாற்றம் ஏற்படக்கூடாது. அதேபோன்று ஏனைய  சலுகைகளும் தொடர்ச்சியாக கிடைக்க வேண்டும். இந்த நம்பிக்கையிலேயே நான் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்தேன்.

எவ்வாறாயினும் தோட்டத்  தொழிலாளர்களின் 1750 ரூபா அடிப்படை சம்பளத்தை வர்த்தமானி ஊடாக அறிவிக்க சம்பள நிர்ணய சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தாலே பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு இதனை கட்டாயமாக்க முடியுமாக இருக்கும்.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பல பிரதேசங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. மலையகத்தில் சில பகுதிகளில் இந்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 25,000 ரூபா மற்றும் 50000 ரூபா வழங்குவதில் குறைபாடுகள் உள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் 8127 நபர்களுக்கு இந்த 25ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக  ஆளும் கட்சி உறுப்பினர் தெரிவித்திருந்தார். ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் 20 ஆயிரம் பேர்வரை இருக்கிறார்கள். அதனால் இதுதொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.

கொத்மலையில் அரச அதிகாரிகள் வேண்டுமென்றே செயற்படுவது போல் உள்ளது. இதுதொடர்பில் இந்த சபையில் இரண்டு தடவைகள் தெரிவித்திருந்தேன். முதல்தடவை இந்த பிரச்சினையை எழுப்பியபோது முற்றாகவே அரச அதிகாரிகள் அந்த மக்களை கண்டுகொள்ளவில்லை. இரண்டாவது தடவை இந்த சபையில் அதுதாெடர்பில் தெரிவித்தபோது,

வேண்டுமென்றே அந்த மக்களை கஷ்டப்படுத்துகிறார்கள். அதனால் இதன் பின்னரும் அரச அதிகாரிகள் அவ்வாறு செயற்பட்டால் அந்த மக்கள் வீதிக்கிறங்குவார்கள். பழிவாங்கும் வகையிலே சில அதிகாரிகள் நடந்துகொள்கின்றனர். இது தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றேன்.

மண்சரிவு அபாயத்தில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு போகுமாறு அதிகாரிகள் கூறுகின்றனர். எப்படி மக்கள் அங்கே திரும்பி போவார்கள். இன்று பெருந்தோட்டங்களில் 2 இலட்சத்து 4ஆயிரம் ஏக்கர் நிலப்பகுதி உள்ள நிலையில் அங்கு அந்த மக்களுக்கான மாற்று இடங்களை வழங்க  முடியும். அதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.