2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து மற்றும் அதன் சாட்சியங்களை மறைக்க முற்பட்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவகவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின், வழக்கு விசாரணைக்கு முன்னரான ஒன்று கூடல் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறும் என கொழும்பு மேல் நீதிமன்றம் புதன்கிழமை (4) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் புதன்கிழமை (4) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி ராஜகிரிய ஜனாதிபதி வித்யாலயத்துக்கு அருகில், சந்தீப் சம்பத் குணவர்தன எனும் இளைஞர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிப் பலத்த காயங்களை ஏற்படுத்தியமை, விபத்தின் பின்னர் வாகனத்தை நிறுத்தாது சென்றமை மற்றும் அது தொடர்பில் போலிச் சாட்சியங்களை உருவாக்கியமை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் கீழ் முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மூன்று பிரதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தண்டனைச் சட்டக்கோவையின் 329 ஆம் பிரிவு மற்றும் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் 151 ஆம் பிரிவின் பிரகாரம், பாரதூரமான வீதி விபத்தை ஏற்படுத்தி அது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கத் தவறியமை மற்றும் காயமடைந்தவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை ஆகியன முதலாவது குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மோட்டார் வாகனச் கட்டளைச் சட்டத்தின் 161(1) (அ) (iii) பிரிவை மீறியமை தொடர்பில் இரண்டாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன், இதற்கு மேலதிகமாக, மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் 161 (1) (அ) (iv) பிரிவை மீறியமை தொடர்பாக மூன்றாவது குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாடலி சம்பிக்க ரணவக, அவரது சாரதியாகச் செயற்பட்ட துசித திலும் துஷார மற்றும் அப்போதைய வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சுதத் அக்மீமன ஆகிய மூன்று பிரதிவாதிகளுக்கும் எதிராகச் சட்டமா அதிபரால் இந்த சழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்நிலையில் முறைப்பாட்டாளர் தரப்பு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிபதி இந்த வழக்கின், வழக்கு விசாரணைக்கு முன்னரான ஒன்று கூடல் எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.