ஒரு காலத்தில் தனி நாடு கேட்டு போராடிய இனம் இன்று மாட்டை மேய்க்க மண்ணை கேட்டு போராடும் நிலையில் உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் மண்ணைக் காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளை பார்த்து வெட்கப்படுகின்றேன் என யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

மட்டக்களப்பில் மகாவலி குடியேற்றத்தால் எத்தனையோ தமிழ் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆளுங்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரவு தமிழ் பேசும் மனிதனாக தனது மண்ணுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் . அவர் மட்டக்களப்பில் பிறந்தவர். மட்டக்களப்புகென மரியாதை உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வீரம் உள்ளது. ஆனால் அங்கு அப்பாவி மக்களின் மாடுகளை சுடுகின்றனர். பிரபு ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது மட்டக்களப்பு என்பது இன்று வரையில் வீரம் விளைந்த மண்ணாகும். அங்குள்ள மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு கஸ்டப்படுகின்றனர். அடுத்த முறை உங்களுக்கு எப்படி மக்கள் வாக்களிப்பர் என்று தெரியவில்லை. அந்த மக்கள் மேய்ச்சல் தரையையே கேட்கின்றனர்.

ஒரு காலத்தில் நாட்டை கேட்டு போராடிய இனம், விடுதலையை கேட்டு போராடிய இனம் இன்று மாட்டை மேய்க்க மண்ணை கேட்கும் போது இனத்துரோகிகள் ஒற்றுமை இன்றி மண்ணைக் காட்டிக் கொடுப்பதை வெட்கமாக கருதுகிறேன் என்றார்.