நாட்டு மக்களின் பாதுகாப்பின்மை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு, எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதால் 2 கோடியே 20 இலட்சம் மக்கள் கடுமையான அழுத்தத்திற்கும் துயரத்திற்கும் ஆளாகி வருகின்றனர். எனவே, சர்வதேச நிதி நிறுவனங்களின் அடிமைகளாகாமல், இப்போதாவது மக்கள் நலன்புரித் திட்டங்களை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
புதன்கிழமை (1) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவித்த அவர், சமூகத்தில் ஆபத்தான நிலையிலுள்ள குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் தாய்மார்களுக்கென விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், யூனிசெப் அமைப்புடன் உடனடியாக கலந்தாலோசித்து விசேட நலன்புரித்திட்டமொன்றை ஆரம்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அரசாங்கம் எவ்வளவுதான் கூறினாலும் கடுமையான உர பற்றாக்குறை ஏற்படுவதால், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் கலந்தாலோசித்து, நெல், சோளம், தேயிலை உள்ளிட்ட அனைத்து பயிர்ச் செய்கைகளுக்கும் தேவையான உள்ளீடுகளை வழங்கும் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தினார்.
தற்போது விதைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, யூரியாவிற்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. விவசாயிகளுக்குத் தேவையான எரிபொருள் கிடைத்தபாடில்லை. சில நாட்களில் சிறு போக பருவம் ஆரம்பிக்கப்படவிருக்கின்ற நிலையில், இதற்குத் தேவையான எரிபொருள் உரியவாறு விவசாயிகளுக்கு இன்னும் கிடைக்கவில்லை. மேலும், பயிர்களுக்கு உத்தரவாத விலை இல்லாமையினால், விவசாயிகள் மிகக் குறைந்த விலையில் தமது அறுவடைகளை விற்க வேண்டி காணப்படுகின்றது.
முழு விவசாயத் துறையும் கடுமையான சரிவை சந்தித்துள்ளதால், இப்போதாவது ஐக்கிய நாடுகள் அமைப்புடன் கலந்தாலோசித்து விவசாய நடவடிக்கைகளை மீளக்கட்டியெழுப்பத் தேவையான தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
மீனவர்கள், தொழில்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் சகல தரப்பினரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள இந்த தருணத்தில் அரசாங்கம் அலட்சியமாக இருக்கக் கூடாது. வீழ்ச்சியையும் சரிவுகளையும் சந்தித்துள்ள நாட்டின் பொருளாதாரத்திற்கு பக்க பலத்தை சேர்க்கும் மக்களுக்காக வேண்டி, முழுமையான நலன்புரி தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதன்பால் அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.
சில நாட்களில் புத்தாண்டுக்காக தொழிற்சாலைகள் மூடப்படவுள்ளதால், புத்தாண்டுக்கு பின்னர் இந்த தொழிற்சாலைகளை மீண்டும் திறக்கத் தேவையான அடித்தளத்தை அமைப்பது அரசின் கடமையாகும். அத்துடன் பராட்டே சட்டத்தின் அமுலாக்கத்தை இடைநிறுத்த வேண்டும் என்பதோடு, மாற்றுத்திறனாளி சமூகம், முதியோர் சமூகம், ஆபத்தான நிலையிலுள்ள தரப்பினர் ஆகிய அனைத்து குடிமக்களும் பாதுகாக்கப்படும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நாட்டின் பொருளாதார வலிமையைத் தக்கவைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இந்நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமையாகவுள்ளது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மட்டுமின்றி மக்களின் பொருளாதார, சமூக, நலன், கல்வி, சுகாதார மற்றும் மீன்பிடி உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கடுமையான நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு முழுமையாக அரசிடமே காணப்படுகின்றது. எவ்வாறாயினும், இந்த இக்கட்டான தருணத்தில் எதிர்க்கட்சியாக எம்மால் மேற்கொள்ள முடியுமான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு நாமும் துணைநிற்போம் என்றார்.