2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் வடக்கு மாகாணத்திலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70.1 சதவீதமானோர் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பிரிவில் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இதற்கமைய, அகில இலங்கை ரீதியான மாகாண மட்ட அடைவு நிலைகளின் அடிப்படையில் இம் முறை வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் எட்டாமிடத்தைப் பெற்று முன்னேற்றம் கண்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு இன்று சனிக்கிழமை (20.06.2026) மாலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இம் முறை வெளியான பெறுபேறுகளின்படி வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுள்ளனர். கடந்த- 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் 69.87 சதவீதத் தேர்ச்சியுடன் தேசிய மட்டத்தில் ஒன்பதாம் இடத்தைப் பெற்றிருந்தது.

கடந்த ஆண்டு தரவுகளுடன் ஒப்பிடுகையில் இம் முறை மாணவர்களின் உயர்தரத்துக்கான தேர்ச்சி வீதத்திலும், தேசிய மட்டத் தர வரிசையிலும் வடக்கு மாகாணம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 627 பேர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர் எனவும் குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.