இலங்கையை வெளிநாட்டுக் கொள்கையின் ஊடாக வழிநடத்திய சிறந்த தலைவர் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க என்பது எவராலும் மறுக்க முடியாது. அவர் அணிசேராக் கொள்கையைக் கொண்டிருந்ததோடு, சர்வதேச அரங்கில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் செயற்பட்டார். பிளவுப்படாத வெளிவிவகார கொள்கையே இலங்கைக்கு சாதகமாக அமையும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
தவறான வெளிவிவகார கொள்கையினால் இலங்கை கடந்த காலங்களில் பல நெருக்கடிகளை சர்வதேச அரங்கில் எதிர்கொண்டது. இலங்கையை வெளிநாட்டுக் கொள்கையின் ஊடாக வழிநடத்திய சிறந்த தலைவர் முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க என்பது எவராலும் மறுக்க முடியாது. அவர் அணிசேராக் கொள்கையைக் கொண்டிருந்ததோடு, சர்வதேச அரங்கில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் செயற்பட்டார். இலங்கையில் எமது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் நாம் இதனை உணர்ந்துள்ளோம்.சில நாடுகளுடனான குறிப்பிட்ட வெளிநாட்டு உறவுகளாலும், நடுநிலையான பாதையைப் பின்பற்றாததாலும் அரசாங்கங்கள் வீழ்ந்துள்ளன என்பதையும் நாம் அறிவோம்.
வெளிநாட்டுக் கொள்கை விடயத்தில் நாம் 'முயன்று தவறும்'போக்கைக் கொண்டிருக்க முடியாது. இன்று நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். சீனா இலங்கையின் மிகப்பெரிய முதலீட்டாளராக உள்ளது. அடிப்படை வசதிகள் இல்லாமல் தத்தளிக்கும் ஒரு கப்பலைப் போன்று நிலைமை உள்ளது. எனவே இது வழிநடத்துவதற்குக் கடினமான பாதையாகும். ஆயினும், எமது சர்வதேச வெளிநாட்டு உறவுகளைக் கையாள்வதில் நேர்மையாகவும், அனைவருக்கும் நியாயமாகவும், எவருக்கும் அடிபணியாமலும் செயற்பட்டால், இந்தக் கப்பலை எம்மால் வெற்றிகரமாக வழிநடத்த முடியும். அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, வேறுபட்ட ஒரு அணுகுமுறையைக் கையாள்வீர்கள் என்று நாம் நினைத்தோம். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை விமர்சித்த போதிலும், இன்று விவேகம் மேலோங்கி, அந்தத் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்வது வரவேற்கத்தக்கது.
எமது வெளிநாட்டுப் பணியாளர்களை பற்றி ஆராய்கையில், இன்று இலங்கை சனத்தொகையில் 10 சதவீதமோனோர் வெளிநாடுகளில் பணியாளர்களாக வேலை செய்கிறார்கள்.அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். சிலரால் அபராதத் தொகைகளைக் கூடச் செலுத்த முடியாத நிலை உள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் இதற்காகச் சிறிது நிதியை ஒதுக்கியுள்ளார் என நான் நினைக்கிறேன். ஆயினும், அனோஜன் சம்பவத்திற்குப் பின்னர் பலர் என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள்; எமது இலங்கையர்கள் பல இடங்களில் நீதிமன்றத்தின் ஊடாக நிவாரணம் பெற முடியாமல் தவிக்கிறார்கள்இ அவர்களிடம் சொத்துக்களோ பணமோ இல்லை. இது தொடர்பாக நானும் ஒரு யோசனையை முன்வைத்திருந்தேன். எமது வெளிநாட்டுப் பணியாளர்கள் இலங்கைக்குப் பாரிய சேவையை ஆற்றுகிறார்கள் என நான் நினைக்கிறேன். எமது பணியாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படும் சந்தர்ப்பங்களில், அவர்களுக்குச் சட்ட நிவாரணம் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
இதற்காகச் சட்டமூலமொன்றின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு நிதியம் எமக்கு அவசியமாகும். ஏனெனில் இதுவொரு பாரிய பிரச்சினையாகும். சில நாடுகளில் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுவதில்லை என்பதையும், சில பெண்களுக்குப் பல்வேறு துன்புறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன என்பதையும் நாம் அறிவோம். இத்தகைய பிரச்சினைகளின் போது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தலையிடுவதுடன்,எமது தூதரகங்களில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவுகளை வெளிவிவகார அமைச்சர் மேலும் வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக சவூதி அரேபியா போன்ற நாடுகளில் இரண்டரை இலட்சம் பணியாளர்கள் உள்ளனர். அங்குள்ள பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது என நினைக்கிறேன். அதேபோன்று குறிப்பாக மத்திய கிழக்கில் எமது பணியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் அவசியமாகும். எனவே அந்தந்த அலுவலகங்களில் தேவையான உதவிப் பணியாளர்களை அதிகரிக்கும் பொறுப்பு உள்ளது என்றார்.