இம்முறை சிறுபோக விவசாய நடவடிக்கைகளுக்காக நீர் விநியோகம் செய்வதில் எந்தவித சிக்கலும் ஏற்படாது என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி ஹேரத், திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது 76 வீதமாகக் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாடளாவிய ரீதியில் உள்ள 376 நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் சுமார் 800,200 ஏக்கர் நிலப்பரப்புக்கு நீர் வழங்கப்படுகிறது. இதில் இம்முறை சிறுபோகத்திற்காக 697,800 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 651,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையும், 46,800 ஏக்கர் நிலப்பரப்பில் மேலதிகப் பயிர்களும் பயிரிடப்படவுள்ளன. இதற்கான நீர் விநியோகத்தில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது.

ஏற்கனவே 205 பிரதான நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் நிலம் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்து விவசாயப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் சிங்கள - தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் மேலும் 75 திட்டங்களின் கீழ் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, நீர் ஆவியாதல் அதிகரித்துள்ளது. எனவே, நிலம் தயாரிக்கும் பணிகளின் போது நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியமாகும். விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் நீர் முகாமைத்துவக் குழுக்களின் தீர்மானங்களுக்கு அமையச் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம், பெரும்போகத்திற்கும் குடிநீர்த் தேவைகளுக்கும் போதுமான நீரைச் சேமித்து வைக்க முடியும் எனவும் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.