தமிழ்த் தேசிய விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் அச்சமின்றிக் குரல்கொடுத்த அரசியல் ஆளுமை அமரர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகால அரசியல் செயற்பாடுகளிலிருந்து தமிழ்த் தேசிய அரசியலின் பல்வேறு பரிமாணங்களிலும் இறுதிவரை உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்ட மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இரவு 11.50 மணியளவில் தனது 69ஆவது வயதில் இயற்கை எய்திய செய்தி தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆரம்பகாலப் போராட்டச் செயற்பாடுகளில் இணைந்து செயல்பட்டதுடன், தமிழர்களின் தேசிய விடுதலை மற்றும் அரசியல் உரிமைகளுக்காகத் தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.

2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினராகவும், 2011ஆம் ஆண்டு வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினராகவும், 2013ஆம் ஆண்டு வடமாகாண சபை உறுப்பினராகவும் செயல்பட்ட அவர், தேர்தல் அரசியலுக்கு அப்பால் தமிழ்த் தேசிய அரசியல் போராட்டங்களிலும் மக்கள் உரிமைகளுக்கான செயற்பாடுகளிலும் தொடர்ந்து முன்னணியில் நின்றார்.

2010 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதித் தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டதன் மூலம் தனது அரசியல் நிலைப்பாட்டையும் தமிழ்த் தேசிய அரசியல் மீதான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தினார். 2024ஆம் ஆண்டு தமிழ்ப் பொது வேட்பாளர் அரசியல் முன்னெடுப்புகளுக்கு ஆதரவாக வடக்கு – கிழக்கில் தீவிரமாகப் பிரசாரம் செய்ததுடன்,2025ஆம் ஆண்டு வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் வெற்றிபெற்று அதன் தவிசாளராகவும் தெரிவானார்.

தமிழர்களின் அரசியல் உரிமைகள்,தேசிய அபிலாஷைகள், நீதி மற்றும் விடுதலை தொடர்பான கோரிக்கைகளை பாராளுமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் துணிச்சலுடன் வெளிப்படுத்தியவர் அமரர் சிவாஜிலிங்கம்.

அரசியல் நெருக்கடிகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தனது தமிழ்த் தேசிய நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காமல் செயல்பட்ட அவரது அரசியல் துணிச்சலும் உறுதியும் தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன.

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை மற்றும் தாயார் பார்வதி அம்மாள் ஆகியோரின் இறுதிக்கிரியைகளை அவர்களது சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் முன்னின்று நடத்திய அவரது செயற்பாடுகள், மனிதநேயத்தையும் உறவுகளின் மீதான ஆழமான அக்கறையையும் வெளிப்படுத்தும் வரலாற்றுப் பதிவுகளாகும்.

அமரர் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் வெறுமனே ஒரு தேர்தல் அரசியல்வாதியாக மட்டுமன்றிஇ தமிழர்களின் தேசிய உரிமைகள் மற்றும் அரசியல் விடுதலைக்காகத் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்த கொள்கைப் பற்றாளராகவும் துணிச்சலான மக்கள் அரசியல் செயற்பாட்டாளராகவும் விளங்கினார்.

அவரது மறைவு குடும்பத்தினருக்கும்இ உறவினர்களுக்கும்இ அரசியல் தோழர்களுக்கும் மட்டுமன்றி தமிழ்த் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

தமிழ்த் தேசிய விடுதலைக்காக ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகாலத்திலிருந்து அரசியல் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களிலும் இறுதிவரை அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அவரது வாழ்வும் அரசியல் பயணமும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஒரு வரலாற்றுப் பாடமாக அமையும்.

கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம், அமரர் எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் தோழர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

தமிழ்த் தேசிய விடுதலைக்காக வாழ்ந்த ஒரு போராளியின் அரசியல் பயணம் நிறைவடைந்திருக்கலாம். ஆனால் அவரது கொள்கையும் அர்ப்பணிப்பும் தமிழ்த் தேசிய வரலாற்றில் என்றும் அழியாத நினைவுகளாக நிலைத்திருக்கும்.