சீனா மற்றும் வடகொரியா இடையே நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வந்த புதிய எல்லைப் பாலம் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளதாகச் சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வடகொரியாவின் அணுவாயுதத் திட்டங்கள் காரணமாகக் கடுமையான சர்வதேசத் தடைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அதன் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியான சீனாவுடன் இந்தப் பாலம் திறக்கப்பட்டுள்ளமை முக்கிய பொருளாதார ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் எல்லை நகரமான டாண்டொங் மற்றும் வடகொரியாவின் சிணுஜு நகரம் ஆகியவற்றை இணைக்கும் வகையில், சுமார் 3 கிலோமீற்றர் நீளத்தில் இந்தப் புதிய யாலு ஆற்றுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2014ஆம் ஆண்டிலேயே நிறைவடைந்திருந்தன. எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்ட விரிசல் மற்றும் வடகொரியா தனது வீதி மற்றும் சுங்கக் கட்டமைப்புப் பணிகளை நிறுத்திவைத்தமை உள்ளிட்ட காரணங்களால், அதன் திறப்பு விழா காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

பல தசாப்தங்கள் பழமையான சீன – கொரிய நட்புப் பாலத்துக்கு மாற்றாக இந்தப் புதிய பாலம் அமைகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் மக்கள் போக்குவரத்தை மேலும் துரிதப்படுத்தும் எனச் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியிருந்தது. இதில் சீனாவின் ஏற்றுமதிகள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன.

எனினும், ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகள் தொடர்ந்து அமுலில் இருப்பதால், வர்த்தகத்தில் உடனடியாகப் பாரிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்க முடியாது என நிபுணர்கள் கருதுகின்றனர்.

உக்ரேன் போரைத் தொடர்ந்து வடகொரியா ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வரும் நிலையில், வடகொரியா மீதான தனது செல்வாக்கை மீண்டும் வலுப்படுத்திக்கொள்ள சீனா முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாகவே கடந்த ஜூன் மாதம் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் வடகொரியாவுக்கு விஜயம் செய்ததாகவும், தற்போது புதிய எல்லைப் பாலம் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.