திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும், மதநல்லிணக்கம் மற்றும் மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்கக் கோரியும் செங்கல்பட்டில் இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மதநல்லிணக்க அமைதி ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றத்தில் வழக்கத்துக்கு மாறாக நில அளவைக் கல்லில் தீபம் ஏற்றச் செல்வது தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்திவைக்க வேண்டும் என்றும், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான மதநல்லிணக்கம் மற்றும் மக்கள் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதன்படி செங்கல்பட்டு கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளில் வந்து அம்பேத்கர் சிலை அருகே நிறைவடைந்தது.
தொடர்ந்து அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட இணைச் செயலாளர் வீராசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியின் மாவட்டச் செயலாளர் இரணியப்பன், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி நூர்முக மது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் செங்கை தமிழரசன், மாவட்டச் செயலாளர் தென்னவன் உள்ளிட்ட பலர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.