இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மதிப்பாய்வுகளை சர்வதேச நாணய நிதியம் (IMF) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கைக்கு 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கவுள்ளதுடன், இதுவரை வழங்கப்பட்ட மொத்த நிதியுதவி 2.4 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக IMF தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜோர்ஜியோ தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், இலங்கை மத்திய வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், 2022 ஆம் ஆண்டில் 60–70 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம் தற்போது ஒற்றை இலக்கத்துக்கு குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தற்போது நடைமுறையில் உள்ள 100 பில்லியன் ரூபாய் மதிப்பிலான எரிபொருள் மானிய திட்டம் தற்காலிகமானது என்றும், அது எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
அந்த மானியத்தின் பயன்பாடு மற்றும் நிலவரத்தைப் பொறுத்து, திட்டம் அதற்கு முன்னரே முடிவுக்கு வரக்கூடும் என்றும் IMF அதிகாரிகளுடன் இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.