தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு ஊழியர்களை பணியமர்த்தும் போது, அப்போதிருந்த அரசியல் அதிகாரிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டு அந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் குறித்து குழு அறிக்கை கோரியுள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர்  நாயகத்தின்  அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக,   கோப் குழுவின் தலைவர்  (வைத்தியர்) நிஷாந்த சமரவீர  தலைமையில்  பாராளுமன்றத்தில்   அண்மையில்  கோப்குழு  கூடியது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு ஊழியர்களை பணியமர்த்தும் போது, அப்போதிருந்த அரசியல் அதிகாரிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டு அந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என குழு சுட்டிக்காட்டியுள்ளது. சில நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளின் காரணமாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை முன்னோக்கி கொண்டு செல்வதில் கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக குழு தெரிவித்துள்ளது. அத்துடன், அதிகார சபையிலுள்ள மனித வளங்களை 06 மாதங்களுக்குள் சரியான முறையில்  முகாமைத்துவம்  செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியுள்ளது.

அதிகார சபைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள்

அதிகார சபைக்கு எதிராக 2023ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள வைப்புத்தொகை குறித்து குழுவில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இது தொடர்பான அறிக்கையொன்றை குழுவிற்கு வழங்குமாறு கோப் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.

டார்லி வீதியிலுள்ள காணி சர்ச்சை

வீடமைப்பு மற்றும் வர்த்தக வளாகம் அடங்கிய கலப்பு அபிவிருத்தித் திட்டத்தை நிர்மாணிப்பதற்காக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டிருந்தஇ கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள 01 ஏக்கர் 26.5 பேர்ச் காணி, குறிப்பிட்ட அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளாமல் வேறு ஒரு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கோப் குழுவின் முன்னிலையில் தெரியவந்துள்ளது.

அதன்பின்னர், இரண்டாவது நிறுவனம் 2017ஆம் ஆண்டில் குறித்த காணியின் 5ஆம் பகுதியை மூன்றாவது நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்துள்ளது. பின்னர், அதிகார சபை அந்த விற்பனைப் பத்திரத்தை இரத்து செய்ததன் காரணமாக, அதற்கு எதிராக மூன்றாவது நிறுவனத்தினால் நீதிமன்றத்தில் 03 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பிலும் குழுவில் விரிவாக ஆராயப்பட்டதுடன், இந்த வழக்குகளுக்கு மேலதிகமாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்  விசாரணையும் இடம்பெற்று வருவதாக வருகை தந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும், இந்த காணியின் உரிமை இன்னும் அதிகார சபையிடமே உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாவல ரங்கியா கும்புக காணி சர்ச்சை

நாவல ரங்கியா கும்புக பகுதியில் அமைந்துள்ள காணி குறித்தும் குழுவில் கலந்துரையாடப்பட்டது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை இக்காணியை நிபந்தனைகளுடன் கூடிய முழுமையான உரிமைப் பத்திரத்தின்  மூலம் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மாற்றியிருந்தது.

பின்னர், அந்த நிறுவனம் காணியின் ஒரு பகுதியை வேறு ஒரு நிறுவனத்திற்கு மாற்றியுள்ளதுடன், மறுபகுதியை தனியார் வங்கி ஒன்றில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளது. இந்த காணியின் பத்திரங்களையும் அதிகார சபை இரத்து செய்ததால், குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் அதிகார சபைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அத்துடன், இக்காணி தனது தனிப்பட்ட காணி என உரிமை கோரி நபர் ஒருவராலும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இங்கு தெரியவந்தது. இந்த வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக வருகை தந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும், மாளிகாவத்தை மாடி வீட்டுத் தொகுதியில் நடத்தப்பட்டு வரும் முன்பள்ளிக்குச் சொந்தமான காணிப் பகுதி குறித்தும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது.