சொகுசு வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்கும், அதற்கான குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட நிதியின் மூலத்தை வெளிப்படுத்துவது தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் வருணி பொகஹவத்த எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட அவர் நேற்று செவ்வாய்க்கிழமை (03) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கொட்டவில பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரியாகப் பணியாற்றிய வருணி பொகஹவத்தவிடம் இருந்த சொகுசு வாகனமொன்று அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மாத்தறை கூட்டுறவுச் சங்கத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி மோசடியுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் நபரொருவரே குறித்த வாகனத்திற்கான குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்தி வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், வருணி பொகஹவத்தவின் மாதாந்தச் சம்பளம் சுமார் 140,000 ரூபாவாக இருந்த நிலையில், குறித்த வாகனத்திற்கான மாதாந்த குத்தகைக் கொடுப்பனவு மாத்திரம் 132,000 ரூபாவாக இருந்துள்ளதாகவும் விசாரணையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சொகுசு வாகனத்தைக் கொள்வனவு செய்வதற்கும், அதற்கான குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட நிதி எங்கிருந்து பெறப்பட்டது என்பதைக் கண்டறியும் நோக்கில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.