ஜப்பான் மற்றும் ருமேனியா நாடுகளுக்கு முதல்முறையாக வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் இலங்கையர்களுக்கு விசேட புலம்பெயர் பயிற்சி நெறியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் பணியகத்தில் பதிவு செய்வதுடன் இந்தப் பயிற்சி நெறியையும் கட்டாயமாகப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என பணியகம் அறிவித்துள்ளது.
இந்தப் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்யாத எந்தவொரு தொழிலாளருக்கும் பணியகத்தின் பதிவு வழங்கப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயிற்சியானது ஜப்பான் வேலைவாய்ப்புக்காகச் செல்வோருக்கு 2 நாட்களும் ருமேனியா வேலைவாய்ப்புக்காகச் செல்வோருக்கு 3 நாட்களும் வழங்கப்படும்.
இந்தக் கட்டாய பயிற்சி நெறிக்கான முன்பதிவுகளை இலங்கையிலுள்ள அனைத்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தன் கிளை அலுவலகங்களிலும் பூர்த்தி செய்து கொள்ளமுடியும் என பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.