போதைப்பொருட்களை பொதி செய்து விநியோகித்தல் மற்றும் அவற்றிற்கான விசேட முத்திரைகளை அச்சிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 'டிஜே சது' என அழைக்கப்படும் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் வாடகைக்குக் குடியிருந்த பாணந்துறை, நல்லூருவ பகுதியில் உள்ள சொகுசு மூன்று மாடி வீடொன்றை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை  (25) முற்றகையிட்டுள்ளனர்.

அவ்வீட்டைச் சோதனையிட்ட போது, ஹெரோயின் போதைப்பொருளை மொத்தமாக விற்பனை செய்யும் போது மாதிரிகளாகக்  காட்டுவதற்காகச் தயாரிக்கப்பட்ட 5 சிறிய பொதிகள், போதைப்பொருட்களைப் பொதி செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட மற்றும் அச்சிடுவதற்காக வைக்கப்பட்டிருந்த விசேட காகிதங்கள், காகிதங்களை வெட்டும் இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், வீட்டிலிருந்த கண்காணிப்புக் கமெராத் தொகுதியின் மெமரி கார்டுகள், 3 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தங்கப் பூச்சு பூசப்பட்ட ஆபரணங்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவை உண்மையான தங்க ஆபரணங்கள் இல்லை எனக் கண்டறியப்பட்டதை அடுத்து, சந்தேகநபரின் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

குறித்த வீடு வாடகைக்கு எடுக்கப்பட்ட போதிலும், அது எப்போதும் பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டமை தொடர்பில் பாணந்துறை கோட்ட குற்றப்புலனாய்வுப் பணியகத்திற்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய, பாணந்துறை நீதவான் நீதிமன்றில் தேடுதல் பிடியாணை பெற்று, பிரதான பொலிஸ் பரிசோதகர் ரோஹன விஸ்வநாத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச் சோதனையை முன்னெடுத்துள்ளனர்.

வெளிநாடொன்றில் தலைமறைவாகவுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு சலிந்து'வின் போதைப்பொருள் வலையமைப்பை வெளிநாட்டிலிருந்து மெஹயெடுக்கும் 'ரந்திக' என்பவரின் பிரதான உதவியாளரான 'டிஜே சது' என்பவரே, தனது காதலியுடன் மாதமொன்றிற்கு 70,000 ரூபா வாடகை அடிப்படையில் இவ்வீட்டில் தங்கியிருந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வீட்டின் அறை ஒன்றில் பெரிய திரை  பொருத்தப்பட்டு, வெளிநாடுகளிலுள்ள நபர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளக்கூடிய நவீன தொடர்பாடல் தொழில்நுட்ப உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

அத்துடன், மூன்று மாடி வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தைக் கண்காணிக்கும் வகையில் சிசிரிவி  கமெராக்கள் பொருத்தப்பட்டு, அவை கையடக்கத் தொலைபேசிகளுடன் இணைக்கப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.

தற்போது தப்பியோடியுள்ள சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பாணந்துறை கோட்ட குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு  வருகின்றனர்.