நாடளாவிய ரீதியில் நிதி கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபடும் நுகர்வோரைப் பாதுகாப்பதுடன், நிதி மோசடிகள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கி 'Be Scam Proof' எனும் மகுடத்தில் ஜூன் மாதத்தை நிதி நுகர்வோர் பாதுகாப்பு மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளது.
அதற்கமைய இம்மாதம் முழுவதும் நிதி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டுவதற்கான பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
அதன்படி இச்செயற்றிட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (2) காலை 10.30 மணிக்கு கொழும்பில் உள்ள மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மத்திய வங்கியின் ஆளுநர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, 'Be Scam Proof' விழிப்புணர்வுப் பிரசாரத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில் அதிகரித்துவரும் நிதி மோசடிகள் குறித் பொதுமக்களை எச்சரித்தல், நிதி தொடர்பான கல்வியறிவை மக்கள் மத்தியில் வலுப்படுத்தல், மோசடிகளிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்புப் பெறுவதற்கான வழிமுறைகளை அறியத்தரல் என்பனவே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
அதற்மைய நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, "நிதி மோசடிகள் மற்றும் அவற்றிலிருந்து பாதுகாப்புப்பெறும் வழிமுறைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டுவதை இலக்காகக்கொண்டு பல்வேறு தரப்பினருடனும் இணைந்து நாம் முன்னெடுத்துவரும் கூட்டு முயற்சிகளில் இந்த நடவடிக்கை ஒரு மிகமுக்கிய மைல்கல்லாகும்" எனச் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று "நாமனைவரும் நிதி ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கமுடியாத ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். இருப்பினும் எமது நாட்டைப் பொறுத்தமட்டில் பெரும்பான்மையானோருக்கு எது சட்ட ரீதியானது, எது சட்ட ரீதியற்றது என்பது பற்றிய போதிய தெளிவு இல்லை. அந்த விழிப்புணர்வற்ற தன்மையை நிதி மோசடியில் ஈடுபடுபவர்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சமகாலத்தில் தொழில்நுட்பப் பாவனை மற்றும் மோசடிகள் பற்றி அறிவின்மை என்பவற்றைப் பயன்படுத்தி இடம்பெறும் மோசடிகள் பற்றித் தெளிவூட்டும் நோக்கிலேயே நாம் இம்மாதத்தை மோசடிகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான விழிப்புணர்வு மாதமாகப் பிரகடனப்படுத்தியிருக்கிறோம்" எனவும் அவர் விளக்கமளித்தார்.
அதேவேளை "பிரமிட் முதலீடு போன்ற பெருந்தொகை நிதியை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்படும் மோசடிகளால், நாட்டின் நிதிக்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் என்பன நீண்டகாலத் தாக்கங்களுக்கு உள்ளாகின்றன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் நாட்டிலுள்ள பதிவுசெய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் கட்டியெழுப்பவேண்டியுள்ளது. அதனூடாகவே பதிவு செய்யப்படாத கட்டமைப்புக்களால் ஒருங்கிணைக்கப்படும் மோசடிகளுக்குப் பொதுமக்கள் பலியாவதைக் குறைக்கமுடியும்" என்றும் அவர் தெரிவித்தார்.