யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் ஆகியோரின் வழக்கு, கடந்த பதினான்கு வருடங்களாக நீடித்து வருகின்றது. இவ்வழக்கு தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாண நீதிமன்றத்திலும், பின்னர் கொழும்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு மீண்டும் யாழ்ப்பாண நீதிமன்றத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இன்னும் சரியான நீதி கிடைக்கவில்லை, இந்த வழக்கின் முக்கிய சாட்சியாளரான கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்றத்துக்கு வருகை தந்து சாட்சியமளிக்க வேண்டும் என காணாமலாக்கப்பட்ட லலித்குமார் வீரராஜின் தந்தை ஆறுமுகம் வீரராஜா விசனம் வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எனது மகன் லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் ஆகியோர் வெள்ளை வேன் ஒன்றில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டு பதினான்கு வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்த நீண்ட காலப்பகுதியில் எமது குடும்பத்தினர் நீதிக்காக தொடர்ச்சியாக சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வழக்கு, பின்னர் கொழும்புக்கு மாற்றப்பட்டு, தற்போது மீண்டும் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இவ்வழக்கு தொடர்பாக கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியமளிக்க வேண்டும் என நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அவர் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியமளிப்பதைத் தவிர்த்து வருகின்றார்.
இருப்பினும், இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையான நீதிவான், இந்த வழக்கு தொடர்பாக மற்றொரு தினத்தை நிர்ணயம் செய்துள்ளார். குறித்த அந்த தினத்தில் கோட்டாபய ராஜபக்ஷ கட்டாயமாக நீதிமன்றத்துக்க வருகை தந்து, எமக்கு ஏற்பட்ட அநீதி தொடர்பிலும், எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் முறையான விளக்கத்தையும் பதிலும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம். பதினான்கு வருடங்களாகத் தொடரும் எமது இந்த போராட்டத்துக்கு, நீதிமன்றத்தின் ஊடாக நீதியான தீர்வு கிடைக்கும் என்றும், கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியமளித்து உண்மைகளை வெளிப்படுத்துவார் என்றும் நாங்கள் முழுமையாக நம்புகின்றோம் என்றார்.