ஜேர்மனி விமான நிலையத்தில் விஷப்பாம்புகள், பல்லிகள் கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.
ஜேர்மனியின் Cologne Bonn விமான நிலையத்தில், 45 வயது மெக்சிகோ தீயணைப்பு வீரர் ஒருவர் 90-க்கும் மேற்பட்ட பல்லிகள் மற்றும் விஷப்பாம்புகளை கடத்த முயன்றபோது சுங்க அதிகாரிகளால் தடுக்கப்பட்டார்.
அந்த நபர் nothing to declare என்ற பச்சை வழித்தடம் வழியாக செல்ல முயன்றபோது, அவர் மிகவும் பதட்டமாக இருந்ததால் அதிகாரிகள் சந்தேகித்தனர்.
முதலில் அவரிடம் போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டதில், கோகெயின் பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது. பின்னர் அவரது பயணப்பெட்டியை சோதித்தபோது, விபர்கள், ராட்டில்ஸ்நேக் உள்ளிட்ட பல்வேறு விஷப்பாம்புகள் மற்றும் இகுவானா போன்ற பல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டன.சுங்க அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜென்ஸ் அஹ்லாந்த், “எங்கள் அதிகாரிகள் பல்வேறு சூவினியர்களை (souvenirs) பார்த்திருக்கிறார்கள். ஆனால் உயிருள்ள 37 விஷப்பாம்புகள் மற்றும் 55 பல்லிகளை ஒரே நேரத்தில் கண்டுபிடித்தது இதுவே முதல் முறை” எனக் கூறினார்.
சில உயிரினங்கள் மனிதாபிமானமற்ற சூழலில் வைக்கப்பட்டிருந்தன, சில உயிரினங்கள் பயணத்தின் போது இறந்துவிட்டன.

அந்த நபர், “ஒரு பிரேசிலிய நண்பருக்காகவே இந்த உயிரினங்களை கொண்டு வந்தேன்” என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார். அவருக்கு ஜேர்மனியில் நுழைவு மறுக்கப்பட்டு, மீண்டும் இஸ்தான்புல் அனுப்பப்பட்டார். உயிருடன் மீட்கப்பட்ட பாம்புகள் மற்றும் பல்லிகள் தற்போது ஜேர்மனியில் உள்ள ஒரு பாம்பு பண்ணையில் பராமரிக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு மட்டும் ஜெர்மனியில் 56,600க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் கடத்தப்பட்டதாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம், உலகளவில் சட்டவிரோத விலங்கு வர்த்தகம் இன்னும் மிகப் பெரிய சவாலாக இருப்பதை மீண்டும் வெளிப்படுத்துகிறது.