பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம் தொழிற்சங்கச் செயற்பாடுகள், தொழிலாளர் போராட்டங்கள் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதற்கான முயற்சியாகும். ஒரு காலத்தில் அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய மக்கள் விடுதலை முன்னணியினரே தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் அதேபோன்ற சட்டமூலத்தை ஆதரித்து நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் காரியாலயத்தில் நேற்று (31) சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

1979ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆரம்பத்தில் தற்காலிக ஏற்பாடாகவே கொண்டுவரப்பட்டது. முதலில் வடக்கில் இடம்பெற்ற போரையும் அப்பகுதி மக்களின் செயற்பாடுகளையும் ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட இச்சட்டம் பின்னர் தெற்கிலும் நடைமுறைப்படுத்தப்பட்டபோது மக்கள் விடுதலை முன்னணியினரும் அதன் அடக்குமுறைகளுக்கு உள்ளாகினர்.

அன்றிலிருந்தே மக்கள் இச்சட்டத்துக்கு எதிராகப் போராடினர். இதற்குப் பதிலாகப் புதிய சட்டமூலமொன்றைக் கொண்டுவர முயற்சித்தபோதும் அதற்குப் பாரிய எதிர்ப்புகள் எழுந்தன.

பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டங்களே போதுமானவை என்றும், புதிதாக அடக்குமுறைச் சட்டமொன்று அவசியமில்லை என்றும் மக்கள் விடுதலை முன்னணியினரும் வலியுறுத்தி நீதிமன்றங்களை நாடினர். ஆனால், தற்போது அவர்களே ஆட்சிக்கு வந்த பின்னர் இத்தகைய சட்டமூலத்தை நியாயப்படுத்துவது ஏன்?

இதுபோன்றே நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் ஊடாகவும் சமூக ஊடகச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்கப்பட்டது. கடந்த கால மக்கள் போராட்ட இயக்கத்தின் எழுச்சிகளை ஒருங்கிணைப்பதில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்காற்றியதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

தற்போதைய அரசாங்கமும் இத்தகைய சட்ட ஏற்பாடுகளை ஆதரிக்கின்றது.

இச்சட்டமூலங்களின் இலக்கு பயங்கரவாதம் அல்ல. மாறாக, தொழிற்சங்கங்கள், தொழிற்சங்கச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளே இலக்காகின்றன.

தொழிற்சங்கப் போராட்டங்களின்போது ஏற்படும் இடையூறுகளைக் காரணமாகக் கொண்டு போராட்ட உரிமைகளைப் பறிக்க முடியாது. அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை இத்தகைய சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தக்கூடாது.

அரச சேவையைச் சுருக்குதல், ஆசிரியர் சேவையில் காணப்படும் பாரிய வெற்றிடங்களை நிரப்புவதில் தாமதம், அரச நிறுவனங்களை மூடுவதற்கான முயற்சிகள் போன்ற நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு உருவாகும் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. இத்தகைய எதிர்ப்புகளை ஒடுக்குவதற்கே புதிய சட்டமூலங்கள் கொண்டுவரப்படுகின்றன.

அன்று எம்முடன் இணைந்து போராடிய தொழிற்சங்கத் தலைவர்களே இன்று இச்சட்டமூலத்தை ஆதரிப்பது கவலைக்குரியது. அடக்குமுறைகளுக்கு உள்ளாகி, உயிரிழப்புகளையும் சந்தித்த தரப்பினர் தற்போது அதேபோன்ற சட்டத்தை நியாயப்படுத்துவது வெட்கக்கேடானது.

கல்வித்துறையிலும் இதே முரண்பாடு காணப்படுகின்றது. கல்விச் சீர்திருத்தங்களுக்கு எதிராகப் போராடியவர்கள் இன்று அவற்றை முன்னெடுப்பதுடன், தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் தனியார் கல்வி விரிவாக்கத்துக்கும் ஊக்கமளிக்கின்றனர்.

இலவசக் கல்வியைப் பாதுகாப்பதற்காகப் போராடியவர்களின் தற்போதைய அணுகுமுறை அவர்களின் முந்தைய கொள்கைகளுக்கு முரணானதாக உள்ளது.

மக்கள் எதிர்பார்த்தது புதிய அரசியல் கலாசாரத்தையும் உண்மையான மாற்றத்தையுமே தவிர, முந்தைய அரசாங்கங்களின் கொள்கைகளைத் தொடர்வதையல்ல.

எனவே, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து இச்சட்டமூலத்துக்கு எதிராக உச்சபட்ச நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.