நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது, பெருந்தொகையான கசிப்பு மற்றும் கோடாவுடன் மூவர் நேற்று சனிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆராச்சிக்கட்டுவ
ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஜய கட்டுபொத்த பகுதியில் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 321 லீற்றர் கசிப்பு மற்றும் 4,180 லீற்றர் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்ட இந்தச் சுற்றிவளைப்பின்போது, 321 லீற்றர் (428 போத்தல்கள்) கசிப்பு, கசிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 4,180 லீற்றர் கோடா (22 பீப்பாய்கள்) மற்றும் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்பட்ட செப்புச் சுருள், எரிவாயு அடுப்பு, எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் விஜய கட்டுபொத்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
களுத்துறை தெற்கு
இதேவேளை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுனாமி தோட்டப் பகுதியில் வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, கசிப்பு காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 5,670 லீற்றர் கோடாவுடன் (30 பீப்பாய்கள்) சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், சுனாமி தோட்டப் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வாதுவை
அத்துடன், வாதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்வத்த வயல்வெளிப் பகுதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 1,327 லீற்றர் 750 மில்லிலீற்றர் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்ட அவர், மிரிஸ்வத்த, வேறகம பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முறையே ஆராச்சிக்கட்டுவ, களுத்துறை தெற்கு மற்றும் வாதுவை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.