யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவக்கூடிய பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர்,பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானங்கள் தரையிறங்குவதற்கு உதவும் விளக்குகளைப் பொருத்துவதற்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த இரண்டு முனையங்களும் முக்கியமானவை எனக் குறிப்பிட்ட அவர், அவற்றை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் பெருமளவு நிதியைச் செலவிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனினும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நேரடியாக வெளிநாட்டு வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வருவதைத் தடுக்கும் நோக்கில் கொழும்பை மையமாகக் கொண்ட அரசியல் சக்திகள் செயற்படுவதாகத் தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் முறையிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை, யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக இல்லம் முற்றாக இடிக்கப்பட்டுள்ளமை தமக்கு அதிர்ச்சியளித்ததாகவும் அவர் கூறினார். 

குறித்த இடத்திலிருந்து நினைவாக மண்ணை எடுத்துச் செல்ல முயன்றபோதும் விமான நிலையத்தில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், இந்தச் செயற்பாடுகள் தொடர்பிலும் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்தித்தபோது, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்பது இதுவரையில் தெரியவில்லை என அவர்கள் கவலை தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா உரிய அழுத்தம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் தமிழக கடற்றொழிலாளர்களின் இழுவை வலைப் பயன்பாட்டினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் கடல் வளங்களும் அழிக்கப்படுவதாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் தம்மிடம் முறையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.