இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான விடுதலைப் போர் முடிவுக்கு வந்ததன் ஆண்டு நிறைவு தினமான எதிர்வரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி தாயகம் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அவரது பேச்சாளர் சையத் மொசம்மல் அலி இன்று (24) செவ்வாய்க்கிழமை ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.
தாயகம் திரும்புவது குறித்து ஷேக் ஹசீனா குறிப்பிட்ட திகதியொன்றை அறிவித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி பங்களாதேஷ் விமானம் ஒன்றில் தாம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தற்போது டெல்லியிலிருந்து டாக்காவிற்குத் தம்மைத் திருப்பி அழைத்துச் செல்ல பங்களாதேஷின் தேசிய விமான சேவையான 'பிமான் பங்களாதேஷ் எயார்லைன்ஸ்' விமானத்தை ஏற்பாடு செய்யுமாறு பங்களாதேஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
"அரசியலமைப்பிற்கு முரணான சூழ்நிலையில் அவரை நாடு கடத்தியுள்ள நிலையில், டிசம்பர் 16 வெற்றி தினத்தன்று அவர் பங்களாதேஷுக்குத் திரும்புவதைச் சாத்தியமாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்" என அவரது பேச்சாளர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தாயகம் திரும்புவதற்காகப் புதிய கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை கோரி ஹசீனா விடுத்த விண்ணப்பங்களை பங்களாதேஷ் அரசாங்கம் நிராகரித்திருந்தது.
2024 ஆம் ஆண்டு மாணவர் தலைமையிலான மக்கள் எழுச்சியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் அடக்குமுறைகளுக்கு உத்தரவிட்ட குற்றச்சாட்டில், பங்களாதேஷின் போர்க்குற்ற நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் ஷேக் ஹசீனா இல்லாத நிலையில் அவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.
அவரது 'அவாமி லீக்' கட்சியும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், ஹசீனா நாடு திரும்பினால் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் எனவும், அவரை அழைத்து வர விமானம் அனுப்புவது குறித்து இந்தியாவுடன் எவ்வித உத்தியோகபூர்வப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை எனவும் பங்களாதேஷ் இராஜாங்க அமைச்சர் ஏற்கனவே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.