1912-ஆம் ஆண்டு மூழ்கிய புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர் தப்பியவர்களில் ஒருவரான லூசி, லேடி டஃப் கார்டன் (Lady Duff Gordon) அணிந்திருந்த அரிய வைர மோதிரம், இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் 150,000 பவுண்டு (சுமார் ரூ.1.7 கோடி) தொகைக்கு விற்பனையாகியுள்ளது.

இந்த தொகை, ஏலத்திற்கு முன்பு கணிக்கப்பட்ட 80,000 பவுண்டு மதிப்பை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்.ஒரே ஒரு வைரம் பதிக்கப்பட்ட சாலிடேர் (Solitaire) வடிவிலான இந்த மோதிரம், இங்கிலாந்தின் வில்ட்ஷயர் பகுதியில் உள்ள Henry Aldridge & Son ஏல நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்டது.

டைட்டானிக் ஆர்வலர்கள் மற்றும் அரிய வரலாற்றுப் பொருட்களை சேகரிப்பவர்களின் கடும் போட்டியால் இதன் விலை எதிர்பார்ப்பை விட அதிகமாக உயர்ந்தது.

1912 ஏப்ரல் 15-ஆம் திகதி டைட்டானிக் தனது முதல் பயணத்தின் போது பனிப்பாறையில் மோதி மூழ்கியது. இந்த விபத்தில் சுமார் 1,500 பேர் உயிரிழந்தனர். அந்த பேரழிவின் போது லூசி டஃப் கார்டன் இந்த மோதிரத்தை அணிந்திருந்தார்.

விபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட அவரது முக்கியமான நகைகளில் உயிர் தப்பிய ஒரே ஆபரணம் இதுவாகும். இந்த மோதிரம் குடும்பத்தினரால் "டைட்டானிக் ரிங்" என்று அழைக்கப்பட்டு வந்தது. மேலும், இது லூசி டஃப் கார்டன் அவர்களின் நிச்சயதார்த்த மோதிரமாக இருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

பல தலைமுறைகளாக குடும்பத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த மோதிரம், பின்னர் அவரது பேரனான ஜான், 3வது எர்ல் ஆஃப் ஹால்ஸ்பரி வசம் சென்றது. அவரது மரணத்திற்குப் பிறகும் குடும்பத்தினர் இதை பாதுகாத்து வந்தனர்.

டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணியாக சென்றிருந்த லூசி டஃப் கார்டன் மற்றும் அவரது கணவர் சர் காஸ்மோ டஃப் கார்டன், கப்பல் மூழ்கியபோது Lifeboat No.1 மூலம் உயிர் தப்பினர். 40 பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட அந்த உயிர்காப்புப் படகில் வெறும் 12 பேர் மட்டுமே இருந்தது பின்னர் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த மோதிரம் ஏலத்தில் வந்தது மிகவும் அரிதான நிகழ்வு என்று தெரிவித்த ஏல நிறுவனர் ஆண்ட்ரூ ஆல்ட்ரிட்ஜ், டைட்டானிக் உயிர் தப்பியவரின் குடும்பத்திலிருந்து நேரடியாக வந்த தனிப்பட்ட பொருள் ஏலத்தில் விற்கப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என கூறினார்.