பொருளாதார நெருக்கடி நிலை இல்லை என அரசாங்கம் தெரிவித்தாலும் சந்தையில் டொலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஏற்றுமதியாளர்கள் டொலரை ரூபாவுக்கு மாற்றுவதற்கு வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் காலத்தை 30 நாட்களாக குறைத்து ரூபா வீழ்ச்சியடைவதை பலவந்தமாக கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இந்த நிலை தொடருமானால் நாடு பயங்கர நிலைக்கு செல்லும் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சர்வதேச நாணய நிதியத்துக்கு மே மாதம் 13அம் திகதி எழுதிய கடிதத்தில், ஏற்றுமதியாளர்கள் டொலரை மாற்றுவதற்காக வழங்கப்பட்டிருக்கும் 90 நாட்கள் என்ற காலத்தை மேலும் இலகுபடுத்தி, ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக்காெடுக்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் தற்போது ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 90 நாட்கள் என்ற காலத்தை ஜனாதிபதி 30 நாட்களாக குறைப்பதற்கு தீர்மானித்திருக்கிறார்.

ஏனெனில் நாட்டில் டொலர் நெருக்கடி இருக்கிறது என்பதாலே 90 நாட்களை 30 நாட்களுக்கு குறைத்திருக்கிறது. இன்று சந்தையில் டொலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனை ஈட்டிக்கொள்ளவே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை அவசரமாக எடுத்திருக்கிறார்.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்்னர் நாட்டில் டொலரின் பெறுமதி 350 ரூபாவுக்கும் அதிகமாக உயர்ந்தது. இதனை கட்டுப்படுத்த மத்திய வங்கி வட்டி வீதத்தை அதிகரித்தது. என்றாலும் அதன் மூலம் டொலரின் பெறுமதி அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் நாணய நிதியத்திடமிருந்து 695 மில்லியன் டொலர் கிடைத்தது. அதன் மூலம் ரூபாவின் வீழ்ச்சி கட்டுப்படும் என நினைத்தார்கள். ஆனால் அவ்வாறு ஒன்றும் இடம்பெறவில்லை. அதனால் தற்போது அரசாங்கம் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்ட 90 நாட்கள் என்ற காலத்தை 30 நாட்களாக குறைத்து பலாத்காரமாக டொரை சந்தையிக்கு கொண்டுவந்து ரூபாவின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த எதிர்பார்க்கிறது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை இல்லை என அரசாங்கம் தெரிவித்து வருகிறது. அப்படியானால் சந்தையில் டொலர் இருக்க வேண்டும்.சந்தையில் போதுமானளவு டொலர் இல்லை என்பது, நெருக்கடி நிலைமை ஒன்று இருக்கிறது என்பதாகும். அதனாலே அத்தியாவசிய பொருட்களுக்கு மாத்திரம் பரிவர்த்தனை வரிக்கு அனுமதிக்குமாறு வர்த்தக வங்கிகளுக்கு மத்திய வங்கி உத்தியோபூரவமற்ற முறையில் தெரிவித்திருக்கிறது. அதனால் நாடு படிப்படியாக நெருக்கடி நிலைக்கு செல்வதை காணமுடிகிறது. வர்த்தக சந்தையின் நம்பகத்தன்மைஇல்லாமல் போயுள்ளதாலே சந்தையில் டொலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

அதனால் அரசாங்கம் வர்த்தக சந்தையின் நம்பிக்கையை கட்டியெழுப்பாமல், குறுக்கு வழிகளால் டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வுகாண முற்பட்டால், நாடு பயங்கரமான தொரு நிலைக்கு செல்லும் என்றார்.