நாட்டுக்கு ஏதேனும் ஒரு சாபக்கேடு இருந்திருந்தால் அது மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமுமே ஆகும். நாட்டின் முன்னேற்றப் பயணத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியவை இந்த கிளர்ச்சிகளே. நாட்டின் ஒரே சாபமாக அமைந்தது இதுவே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் புதன்கிழமை (10) ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து அதில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாட்டுக்கு ஏதேனும் ஒரு சாபக்கேடு இருந்திருந்தால் அது மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சிகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமுமே ஆகும். நாட்டின் முன்னேற்றப் பயணத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியவை இந்த கிளர்ச்சிகளே. நாட்டின் ஒரே சாபமாக அமைந்தது இதுவே.
இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் சிவசங்கர் மேனன் எழுதியுள்ள நூலில் இந்த கிளர்ச்சிகள் காரணமாக இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த இழப்பு நாட்டுக்கு ஏற்பட்டிருக்காவிட்டால் இன்று இலங்கை எந்தவொரு பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொண்டிருக்காது. எனவே நாட்டின் சாபக்கேடு யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுக் கணக்குகள் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் ஆய்வு செய்துள்ள சர்வதேச நிதி நிறுவனங்கள், இலங்கையின் பொருளாதாரம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக எச்சரித்து வருகின்றன. ஆனால் அரசாங்கத்தில் இருப்பவர்கள் நாட்டில் எந்தவொரு பொருளாதாரப் பிரச்சினையும் இல்லை என்று கூறுகின்றனர். தாங்கள் பொருளாதார நிபுணர்கள் என்ற எண்ணத்திலேயே அவர்கள் செயற்படுகின்றனர்.
இந்த அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாது. அதுவே மிகவும் விசித்திரமான நிலையாகும். கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்களில் இருந்தவர்கள் நாட்டில் ஏற்படவிருந்த நெருக்கடிகளை முன்கூட்டியே உணர்ந்தனர். அதற்கேற்ப சிலர் பொறுப்புகளைத் துறந்ததுடன், சிலர் அதனை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
ஆனால் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நிலைமையின் தீவிரம் பற்றிய புரிதல் இல்லை. இவ்வாறான பாரிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கிய பின்னரும் அவர்கள் அதனை உணராமல் செயற்படுகின்றனர். இதன் விளைவாக இந்த ஆட்சிக்காலத்தின் இறுதியில் மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார வீழ்ச்சிக்கும் கடுமையான பணவீக்கத்துக்கும் நாடு தள்ளப்படவுள்ளது.
பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வருகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் சந்தையில் அரிதாகும் நிலையும் உருவாகி வருகிறது. தற்போதைய நிலைமையின்படி எதிர்காலத்தில் ஏற்படவிருப்பவை அனைத்தும் எதிர்மறையான விளைவுகளாகவே காணப்படுகின்றன. நாடு மீண்டும் ஒரு பாரிய மக்கள் போராட்ட சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது. மக்களுக்கு உணவு கிடைக்காத நிலை உருவானால் அவர்கள் வீதிக்கு இறங்கி போராடுவதை எவராலும் தடுக்க முடியாது. அதற்கு தலைவர்கள் தேவையில்லை. கடந்த முறை மக்கள் வீதிக்கு இறங்கியபோதும் எந்தவொரு தலைவரும் முன்னின்று வழிநடத்தவில்லை.
தற்போதைய சூழ்நிலையில் டொலரின் பெறுமதி உயர்ந்தாலும் நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை என்று மத்திய வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் டொலரின் பெறுமதி எவ்வாறு அதிகரிக்கிறது, ரூபாயின் பெறுமதி எவ்வாறு வீழ்ச்சியடைகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். கடந்த காலத்தில் சமூக ஊடகங்களில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பாராளுமன்றத்துக்கு வருவார் என்ற தகவல்கள் பரவின. ஆனால் அவர் வெறுமனே பாராளுமன்றத்துக்கு சென்றால் அதனால் எந்தவொரு பயனும் ஏற்படாது. அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதாலோ அல்லது நாட்டின் நிலைமையை விளக்குவதாலோ தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது.
இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க வேண்டுமெனில் ரணில் விக்ரமசிங்கவிடம் நாட்டின் பொறுப்பை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகவே நாம் தற்போது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். நாம் மேற்கொள்ளும் அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் ரணில் விக்ரமசிங்க என்ற தனிநபருக்காக அல்ல. மாறாக இந்த நாட்டின் மக்களுக்காகவே அவை முன்னெடுக்கப்படுகின்றன. அவர் விரைவில் மக்கள் சந்திப்புகளிலும் பொதுக் கூட்டங்களிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
அவர் வெறுமனே பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்படுவதால் எந்தவொரு மாற்றமும் ஏற்படாது. நாட்டின் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்து நாட்டை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாகும். அதுவே தற்போதைய நெருக்கடியில் இருந்து வெளியேறுவதற்கான ஒரே வழியாகும். இந்த நாட்டின் மக்களின் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் ஒரு எல்லை உண்டு. உலக வரலாற்றில் இடம்பெற்ற ரஷ்யப் புரட்சியும் பிரெஞ்சுப் புரட்சியும் மக்களின் பசியினாலும் பொருளாதார நெருக்கடியினாலும் உருவானவையாகும் என்பதை மறந்துவிடக் கூடாது.
ரணில் விக்ரமசிங்க எப்போது நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே காணப்படுகிறது. அவர் நாட்டின் பொறுப்பை ஏற்காவிட்டால் நாட்டின் எதிர்காலம் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கும். அவர் சர்வதேச சமூகத்தாலும் உலக நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராவார். கடந்த காலத்தில் அவர் வெளிப்படுத்திய பொருளாதார நிர்வாகத் திறமையை உலகம் முழுவதும் பாராட்டியுள்ளது. எதிர்காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் அவர் மீண்டும் ஜனாதிபதி பதவிக்காகவே போட்டியிடுவார். சாதாரண தேர்தல்களில் போட்டியிட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.
எனவே முதலில் பொதுவான அரசியல் கூட்டணியொன்றை உருவாக்க வேண்டும். அதன் பின்னர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் திறன் யாருக்கு உள்ளது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். அப்போது நாட்டை வழிநடத்தக்கூடிய ஆளுமை யாரிடம் உள்ளது என்பது தெளிவாக வெளிப்படும். பொய்யான வாக்குறுதிகளை வழங்குபவர்களிடம் மீண்டும் நாட்டை ஒப்படைத்தால் நாடு மீண்டும் அழிவுப் பாதையை நோக்கிச் செல்லும். தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சில நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை முன்னோக்கிச் சென்றாலும் அவற்றால் பெரிய மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை. ஏனெனில் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பது நீதிமன்ற நடவடிக்கைகள் அல்ல. மாறாக மக்களின் பொது அபிப்பிராயமும் ஜனநாயகத் தீர்ப்புமே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்றார்.