ஃப்ளைதுபாய் விமான நிறுவனத்தில் பணியாற்றியதாகக் கூறப்படும் அல் ஹமாமி என்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த விமானி, தீவிரவாதக் கருத்துகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகங்கள் மற்றும் அவரது பின்னணி தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓமனில் இருந்து வெளியேறிய பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்வதற்கு முன்னர் ஹமாமி தனது பெரும்பாலான காலத்தை சிரியாவில் கழித்ததாகவும், அங்கு அவர் தீவிரவாதக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது தீவிரவாதக் கருத்துக்கள் தொடர்பாக கவலைகள் எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஓமனின் தேசிய விமான நிறுவனமான ஓமன் ஏரில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த பயிற்சிப் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹமாமி ஓமன் நாட்டைச் சேர்ந்தவர் எனவும், ஓமனைச் சேர்ந்த தந்தைக்கும் சிரியாவைச் சேர்ந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், அவரது வாழ்க்கையின் பல ஆண்டுகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் கழித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், அவரிடம் ஐக்கிய அரபு அமீரக குடியுரிமை இல்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃப்ளைதுபாய் நிறுவனத்தில் அவர் சுமார் எட்டு மாதங்கள் மட்டுமே பணியாற்றியதாகவும், இதற்கு முன்னர் மொராக்கோவின் தேசிய விமான நிறுவனமான ரோயல் ஏர் மரோக் நிறுவனத்தில் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்தில் ஹமாமி கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அவர் சவூதி அரேபியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் எவ்வாறு விமானக் குழுவில் இடம்பெற்றார் என்பது தொடர்பாக ஷின் பெட், மொசாட், இராணுவம் மற்றும் போக்குவரத்து அமைச்சு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஹமாமியிடம் இருந்த உடமைகளில் “சுதந்திர பாலஸ்தீனம்” எனும் கருத்தை ஆதரிக்கும் குழுக்களின் துண்டுப் பிரசுரங்கள் மற்றும் வெளியீடுகள் உள்ளிட்ட பாலஸ்தீன ஆதரவு பொருட்கள் காணப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், அவர் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவையும் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
அவரது நடவடிக்கைகள் மற்றும் அவருக்கு இருந்ததாகக் கூறப்படும் தீவிரவாத நோக்கங்கள் தொடர்பில் அதிகாரிகள் விரிவான விசாரணையை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஓமன் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை என்பதுடன், அந்நாட்டுடன் தூதரக உறவுகளையும் கொண்டிருக்கவில்லை.
இந்நிலையில், ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாமி, டெல் அவிவ் நோக்கிப் பயணிக்கும் விமானத்தில் பணியாற்றுவதற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது ஆரம்பகால பணிகள், பயண வரலாறு, தொடர்புகள் மற்றும் விமானக் குழுவில் பணியாற்றுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட விதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.