தனிமையில் வசிக்கும் வயோதிபர்கள் குற்றவாளிகளின் இலகுவான இலக்காக மாறக்கூடும் என எச்சரித்துள்ள  சிறிலங்கா  காவல் துறையினர் , அவர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

காவல் துறை ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிள்ளைகள் தொழில் நிமித்தம் வெளியிடங்களுக்குச் செல்லுதல், வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்தல் அல்லது நாட்டின் ஏனைய பகுதிகளில் குடியேறுதல் போன்ற காரணங்களால் பல வயோதிபர்கள் தனிமையில் விடப்பட்டுள்ளதாகவும், இதனால் தனிமையில் வசிக்கும் வயோதிபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமான விடயமாக மாறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய சம்பவங்கள் தனிமையில் வசிக்கும் வயோதிபர்களின் பாதுகாப்பற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள  சிறிலங்கா  காவல் துறையினர் , குற்றவாளிகள் குறிப்பாக போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிடும் நோக்கில் இவ்வாறான வீடுகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில், இத்தகைய கொள்ளைச் சம்பவங்களின் போது வயோதிபர்கள் கொலை செய்யப்பட்ட நிகழ்வுகளும் பதிவாகியுள்ளதாக காவல் துறை ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, தனிமையில் வசிக்கும் வயோதிபர்களின் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காகப் பொலிஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்வைத்துள்ளனர். 

வயோதிபர்களைப் பராமரிப்பதற்காக நியமிக்கப்படும் பராமரிப்பாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் ஏனைய நபர்களின் பின்னணி குறித்து ஆராய்வதுடன், அவர்களைப் பணியில் அமர்த்துவதற்கு முன்னர் உரிய பொலிஸ் நிலையங்களிலிருந்து காவல் துறை நற்சான்றிதழ் அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பிரதேச பொலிஸ் நிலையம், பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119, சுவசெரிய அம்புலன்ஸ் சேவை இலக்கமான 1990, அருகிலுள்ள அயலவர் மற்றும் குடும்ப வைத்தியர் ஆகியோரின் அவசரத் தொடர்பு இலக்கங்களை வீட்டின் முக்கிய இடங்களில் தெளிவாகத் தெரியும்படி காட்சிப்படுத்துமாறு காவல் துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.

தமது பகுதிகளில் தனிமையில் வசிக்கும் வயோதிபர்கள் தொடர்பில் உரிய கிராம உத்தியோகத்தர் மற்றும் சமூக காவல் துறை குழுவிற்குத் தெரியப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வயோதிப பெற்றோருக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும்காவல் துறையினர் தொடர்பு இலக்கங்கள் சேமிக்கப்பட்ட, இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய கையடக்கத் தொலைபேசிகளை வழங்குவதுடன், அயலவர்களுடன் சிறந்த உறவைப் பேணுமாறும், பல்வேறு வேலைகளுக்காக முன்பின் தெரியாத நபர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இரவு நேரங்களில் வீடுகளைச் சுற்றிப் போதியளவு வெளிப்புற மின்விளக்குகளைப் பொருத்துவதன் அவசியத்தையும் காவல் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கு முன்னரே சாத்தியமான பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கண்டறிவதில் விழிப்புடன் செயற்படுமாறும், வயோதிபர்களின் தனிமையைக் குறைத்து அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் அதிக கவனம் செலுத்துமாறும் காவல் துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.