சிறிலங்கா பாராளுமன்றம் மற்றும் வடக்கு மாகாண சபை ஆகியவற்றின் முன்னாள் உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் நகரபிதாவுமாகிய திரு. எம்.கே. சிவாஜிலிங்கம் அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையளிக்கிறது.
ஒரு தமிழராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம், இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால மற்றும் நீறுபூத்த நெருப்பாக இருக்கும் பிரச்சினைகளை தேசிய மற்றும் சர்வதேச கவனத்திற்குக் கொண்டு வர அவர் அயராது பாடுபட்டார்.
இதன் தொடர்ச்சியாக தமிழ் மக்களின் சட்டப்பூர்வமான அபிலாசைகளை முன் வைத்து ஒரு தமிழ் பொது வேட்பாளர் பல்லாயிரக் கணக்கான ஆதரவினை பெறுவதற்கான ஒரு தளத்தினை மேம்படுத்த கூடியதாக இருந்தது.
மேலும், வடக்கு மாகாண சபையில் தமிழின அழிப்புத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முன்னின்று செயற்பட்டதுடன், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளுக்காகவும், தமிழின அழிப்பினை நிரூபிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறையை வலியுறுத்தியும், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அவர் இறுதிவரை உறுதியாகக் குரல் கொடுத்தார்.
அன்னாரின் பிரிவால் ஆழ்ந்த துயரில் மூழ்கியிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
பிரித்தானியத் தமிழர் பேரவை