தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன்!
Ad Space
Ad Space
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம், இனி எவ்வாறு கேட்பது எனத் தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை (25) தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் நடைபெற்ற சிறைக் கைதிகள் படுகொலை பொதுநாள் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
கடந்த வருடம் மார்கழி மாதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலங்கையர் தினம் கொண்டாடுவதற்காக தமிழ் அரசு கட்சியை சேர்ந்த நான்கு பேரை, கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி செயலகம் அழைத்திருந்தார்.
இக்கலந்துரையாடல் வேறாக இருந்தாலும் ஜனாதிபதியை சந்தித்தபோது, இரு கரம் கூப்பிக் கேட்டோம். தமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள். அதிலும் இலங்கையர் தினத்தில் விடுதலை செய்தால் சந்தோஷமடைவோம் எனவும் கூறினோம். ஆனால், நடக்கவில்லை.
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ்த் தேசியம் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திப் பேசியிருக்கிறோம்.
அது மட்டுமல்லாது ஜனாதிபதியை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தவறாமல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியிருக்கிறோம். ஆனால், நிறைவேறாத ஆசையாக இருந்து வருகிறது.
தற்போது சிறையில் 10 தமிழ் அரசியல் கைதிகள் இருக்கிறார்கள். அவர்களின் விபரம் அடங்கிய கோவையை குரலற்றவர்களின் குரல் அமைப்பு என்னிடமும் தந்துள்ளார்கள். என்னால் முயன்ற வரை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியுடன் பேசியிருக்கிறேன்.
ஆகவே, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடம் இரு கரம் கூப்பி விடுவியுங்கள் என கேட்டுவிட்டேன். வேறு எவ்வாறு கேட்பது என எனக்குத் தெரியவில்லை என்று அவர் தெரிவித்தார்.
Ad Space
Ad Space