இலங்கைப் பிரஜைகளைக் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி சட்டவிரோதமாக ஆட்கடத்தலில் ஈடுபட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய சந்தேகநபர் ஒருவர், இலங்கையிலிருந்து நாடுகடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்திய தேசிய புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய தேசிய புலனாய்வு பிரிவு விடுத்த கோரிக்கைக்கு அமைய பிறப்பிக்கப்பட்ட இன்டர்போல் சிவப்பு அறிவித்தலின் அடிப்படையில் இலங்கை பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த புதுமடத்தைச் சேர்ந்த சந்தேகநபர், இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் திகதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்லுபடியாகும் பயண ஆவணங்களுடன் கனடாவுக்கு அனுப்பி வைப்பதாகப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து இலங்கைப் பிரஜைகளைக் கடத்தும் சதியில் இவர் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் பணத்தை வசூலித்து, அதனை 'ஹவாலா' முறை மூலம் இந்தியாவிலுள்ள ஏனைய கூட்டாளிகளுக்கு அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களைக் கடத்திச் சென்று சட்டவிரோதமாகத் தடுத்து வைக்க இவர் உதவியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

2021 ஆம் ஆண்டு கர்நாடகாவின் மங்களூருவில் உள்ள பல இடங்களில் பொலிஸார் நடத்திய சோதனையில், செல்லுபடியாகும் ஆவணங்கள் இன்றித் தங்கியிருந்த பல இலங்கைப் பிரஜைகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு ஆரம்பமானது. ஆரம்பத்தில் இந்திய தண்டனைச் சட்டம் , வெளிநாட்டினர் சட்டம் மற்றும் கடவுச்சீட்டுச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட இவ்வழக்கை, 2021 ஜூலையில் இந்திய தேசிய புலனாய்வு பிரிவிவு பொறுப்பேற்று குற்றச் சதி (120B), ஆட்கடத்தல் (370) மற்றும் மோசடி (420) ஆகிய பிரிவுகளின் கீழ் மறுபதிவு செய்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இரு முக்கிய சந்தேகநபர்கள் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் கைது செய்யப்பட்டு, தற்போது பெங்களூரு இந்திய தேசிய புலனாய்வு பிரிவின்  விசேட நீதிமன்றத்தில் விசாரணைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.