நில்வளவை மற்றும் ஜின்  ஆறுகளை அண்டிய சில தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு நிலைமை தொடர்ந்து நீடித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் மழைவீழ்ச்சி குறைவடைந்திருந்தாலும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் தாழ்நிலப் பகுதிகளுக்கான வெள்ளப்பெருக்கு அபாயம் தொடர்ந்தும் காணப்படுகிறது.

நில்வளவை ஆற்றின் அக்குரஸ்ஸ மற்றும் அதனை அண்டிய கீழ்மட்டப் பகுதிகளிலும், ஜின் ஆற்றின் பத்தேகம மற்றும் அதனைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளிலும் சிறிய அளவிலான வெள்ள நிலைமை நீடிக்கிறது. நீர்மட்டத்தில் பாரிய உயர்வு பதிவாகாத போதிலும், தாழ்நிலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் தொடர்கிறது.

மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகின்ற போதிலும், மில்லக்கந்த மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர்மட்டம் சிறிய வெள்ள மட்டத்திற்கு அருகிலேயே காணப்படுகிறது.

இவற்றின் நீர்மட்டங்கள் படிப்படியாகக் குறைந்து வருவதுடன், மகாவலி ஆற்றின் மேல் பகுதிகளில் அபாயகரமான நீர்மட்ட உயர்வு எதுவும் பதிவாகவில்லை.

நில்வளவை கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 75 முதல் 100 மில்லி மீற்றர் வரையும், மகாவலி ஆற்றின் மேல் பகுதிகளில் 50 முதல் 75 மில்லி மீற்றர் வரையும், மகா ஓயாவின் மேல் பகுதிகளில் சுமார் 50 மில்லி மீற்றர் வரையும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

ஈர வலய ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்வாகவே உள்ளதால், எதிர்வரும் மணிநேரங்களில் பெய்யக்கூடிய பலத்த மழையால் நீர்மட்டம் வேகமாக உயரக்கூடும். அத்துடன், நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படும் அளவுகள் மாற்றமடையக்கூடும் என்பதால், ஆறுகளுக்கு அருகிலுள்ள தாழ்நிலப் பகுதி மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.