கம்பஹா - கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹங்வெல்ல வீதியில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள், தோட்டாக்கள் மற்றும் கைக் குண்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மில்லத்தே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு நேற்று (17) மாலை சனிக்கிழமை கிடைத்த தகவலையடுத்து, குறித்த திரையரங்கில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சோதனையின் போது, குறித்த திரையரங்கினுள் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 பிஸ்டல் ரக துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர் துப்பாக்கி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிப்பீட்டர் துப்பாக்கி, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு போர் 12 துப்பாக்கி, போர் 12 ரக தோட்டாக்கள் 398, போர் 16 ரக தோட்டாக்கள் 278, பொயிண்ட் 32 துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 3,083 தோட்டாக்கள் மற்றும் 2 கைக் குண்டுகள் ஆகியவை  கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.